காரைக்கால்

காரைக்காலில் முதன்முறையாக நெல் திருவிழா

7th Sep 2019 08:56 AM

ADVERTISEMENT

காரைக்கால் வேளாண் கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்துடன் நெல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து காக்கும் வகையில், பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் ஆத்மா அமைப்பு,  நெல் ஜெயராமனின் கிரியேட் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து, காரைக்காலில் முதல் முறையாக நெல் திருவிழாவை நடத்தியது.
  வேளாண் கல்லூரி கட்டடத்தின் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற நெல் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் வி. கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
 கூடுதல் வேளாண் இயக்குநர் (பொ) ஜே.செந்தில்குமார், வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் ஏ.ஷேக் அலாவுதீன், ஏ. புஷ்பராஜூ, கிரியேட் அமைப்பின் தலைவர் பி. துரைசிங்கம், மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளர்  எஸ். ராஜீவ், இயற்கை விவசாயி மருத்துவர் உமாமகேஸ்வரி  உள்ளிட்டோர் நெல் திருவிழாவின் நோக்கங்கள் குறித்துப் பேசினர்.
 நவீன வேளாண் முறைகள், அங்கக வேளாண் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள், மதிப்புக் கூட்டி சந்தைப் படுத்துதல், அங்கக வேளாண் சான்றிதழ் பெறும் முறை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பல்வேறு தகவல்களை வேளாண் வல்லுநர்கள், முன்னோடி இயற்கை விவசாயிகள் எடுத்துக் கூறினர். விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு வேளாண் வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.
கண்காட்சி: இக்கண்காட்சியில், நெல் ஜெயராமன் மீட்டெடுத்த 174 பாரம்பரிய நெல் ரகங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 
குறிப்பாக கருப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, இலுப்பப்பூ சம்பா, தூயமல்லி, குல்லகார், சீரகசம்பா, பூங்கார், மைசூர் மல்லி, பொன்னி, கருடன் சம்பா,  ஒட்டடையான் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்ததோடு, பாரம்பரிய விவசாயம் சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. 
 ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மாப்பிள்ளைச் சம்பா, கொத்தமல்லி சம்பா, கருப்புக் கவுனி, பூங்கார் உள்ளிட்ட பாரம்பரிய விதை நெல் ரகங்களில் ஏதேனும் ஒரு  ரகத்தில்  2 கிலோ வழங்கப்பட்டது.  இதை வாங்கிப் பயனடையும் விவசாயிகள் அடுத்த ஆண்டில் தனது அருகாமையில் உள்ள விவசாயிகளுக்கு விதை நெல் கொடுத்து, பாரம்பரிய நெல் ரக சாகுபடியைப் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், 60 நாள்கள் முதல் 200 நாள்கள் வரை கொண்ட பாரம்பரிய ரகங்கள் குறித்து கிரியேட் அமைப்பினர் விளக்கிக் கூறினர். 
கூடுதல் விவரங்களுக்கும், விதை நெல் தேவைக்கும் திருத்துறைப்பூண்டியில் உள்ள நெல் ஜெயராமனின் கிரியேட்  இயற்கை வேளாண் தகவல் மையத்தை அணுகலாமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
பாரம்பரிய உணவு: இத்திருவிழாவில் பாரம்பரிய உணவு தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பரிமாறப்பட்டது. அடுத்த ஆண்டும் நெல் திருவிழா காரைக்காலில்  நடத்த திட்டமிட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 காரைக்கால் மாவட்டம் மற்றும் சுற்று வட்டார தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 300 -க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
நெல் திருவிழா காரைக்காலில் முதல் முறையாக நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் பங்கேற்க புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருவதால் இவர்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT