காரைக்கால்

ஐ.பி.பி. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் காரைக்காலுக்கு 13- ஆவது இடம்: அஞ்சல் துறை கண்காணிப்பாளர் தகவல்

7th Sep 2019 08:58 AM

ADVERTISEMENT

அகில இந்திய அளவில், அஞ்சல் துறை வங்கி (ஐ.பி.பி.) வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் காரைக்கால் வங்கி 13-ஆவது இடத்தில் உள்ளதாக நாகை கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் தெரிவித்தார்.
அஞ்சல் துறையில் வங்கிச் சேவை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, காரைக்கால் வங்கி சார்பில் ஒரு வார காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வங்கிக் கணக்குத் தொடங்குவதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு, கணக்குத் தொடங்குதல் உள்ளிட்டவை இந்த காலக்கட்டத்தில் நடைபெறுகிறது. 
காரைக்கால் தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,  நாகை கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் தலைமை வகித்துப் பேசியது: ஐ.பி.பி. வங்கி சேவை தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. அகில இந்திய அளவில் 650 கிளைகள் உள்ள நிலையில், ஓராண்டில் 1 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில்  வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டு, இலக்கு எட்டப்பட்டுள்ளது. காரைக்கால் வங்கியானது அதிகமான கணக்குகளைத் தொடங்கியதன் மூலம் அகில இந்திய அளவில் 13-ஆவது இடத்தில் உள்ளது பெருமைக்குரியதாகும். காரைக்கால் மாவட்டத்தில் வரிச்சிக்குடி பகுதி அஞ்சல் ஊழியர் மோகன் தமது எல்லைக்குள்பட்ட பகுதியில் 1,370 புதிய கணக்குகள் தொடங்கியதன் மூலம் அவர் அகில இந்திய அளவில் 24 -ஆவது நிலையில் உள்ளார் என்பது கூடுதல் பெருமையாகும்.
கிராமப்புறப் பகுதியை டிஜிட்டல் நிலைக்கு கொண்டுவருவதே இந்த வங்கியின் நோக்கம். ஒவ்வொரு வீட்டிலும் ஓர் உறுப்பினராவது அஞ்சல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வணிகர்களுக்கான தனிக் கணக்குத் தொடங்கப்படுகிறது. இவர்களுக்கு பார் கோடு தரப்படுகிறது. வாடிக்கையாளர் தங்களது ஆதார் எண் மூலம், பொருள்களுக்கான பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து பரிமாற்றம் செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். காரைக்கால் மாவட்டத்தில், அண்டூர், காஞ்சிபுரம் கோயில்பத்து, முப்பைத்தங்குடி ஆகிய 3 கிராமங்களில் முழுமையாக அஞ்சல் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
ஏ.இ.பி.எஸ். என்கிற ஆதார் வழி வங்கிச் சேவையைப் பெற, அஞ்சல் வங்கியில் கணக்கு வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஆதார் எண் முறையில் வேறு வங்கியில் உள்ள தமது கணக்கிலிருந்து பணம் எடுக்கவும்,  செலுத்தவும் முடியும்.  அத்துடன், பல்வேறு மானியங்களையும் இந்த கணக்கில் வரவுவைக்க ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதுதொடர்பான விவரங்களை காரைக்காலில் உள்ள வங்கி மற்றும் தபால் ஊழியர்களிடம் கேட்டறிந்துகொள்ளலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், காரைக்கால் அஞ்சலக அதிகாரி நாகராஜ், ஆய்வாளர் செந்தில், ஐ.பி.பி. வங்கிக் கிளை மேலாளர் ஸ்ரீநாத் ஆகியோர் பேசினர். வணிகர்கள் சிலருக்கு பார் கோடு கொண்ட அட்டை வழங்கப்பட்டது. அதிகமாக வங்கிக் கணக்குத் தொடங்க நடவடிக்கை எடுத்த தபால் ஊழியர்கள் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். ஊழியர்கள், பொதுமக்கள், வணிகர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT