காரைக்கால்

முகத்துவாரம் தூர்வார நடவடிக்கை: மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்

4th Sep 2019 07:07 AM

ADVERTISEMENT

அரசலாறு முகத்துவாரம் தூர்வார வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து கடந்த 9 நாள்களாக வேலை நிறுத்தம் செய்துவந்த  விசைப்படகு மீனவர்கள், திங்கள்கிழமை இரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
காரைக்காலில் முல்லையாறு - அரசலாறு இணையும் இடத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகுகள், அரசலாறு முகத்துவாரம் வழியே கடலுக்குச் சென்று திரும்புகின்றன. முகத்துவாரம் அவ்வப்போது தூர்ந்துப்போகும்போது தூர்வாரப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், படகுகள் இயக்கம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கூறி வந்தனர். தூர்வார நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
காரைக்காலில் இருந்து 250-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கம் இருக்கும் நிலையில், படகுகள் முடங்கியதால் மீன்வரத்து தடைபட்டது. உள்ளூர் சந்தைக்கு கிராமங்களின் ஃபைபர் படகு மூலமாக பிடித்துவரப்படும் மீன்களும், நாகப்பட்டினம், தரங்கம்பாடி பகுதியிலிருந்து மீன் வந்துகொண்டிருந்தது.
புதுச்சேரி முதல்வர், மீன்வளத் துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து மீனவர்கள், முகத்துவாரத்தை தூர்வார ஏற்பாடு செய்ய வலியுறுத்தினர். மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கத்தையும் சந்தித்து வலியுறுத்தினர். தூர்வாருவதற்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சத்தை வைத்திலிங்கம் தருவதாக ஒப்புதல் தெரிவித்த நிலையில், பொதுப்பணித் துறை நீர்ப்பாசனப் பிரிவு மேற்கொண்ட தொகையின் அடிப்படையில், முகத்துவாரம் தூர்வாருவதற்கு ஒப்பந்த புள்ளி (டெண்டர்) விடும் பணியை செய்துள்ளது. இந்நிலையில், கோரிக்கை சாதகமடைந்ததை கருத்தில்கொண்டு காரைக்கால் மாவட்ட மீனவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டு திங்கள்கிழமை இரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லத் தொடங்கினர்.
இதுகுறித்து, விசைப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கூறியது: முகத்துவாரம் தூர்வாரும் பணிக்கான ஒப்பந்த புள்ளி  விடும் பணியை அரசு நிர்வாகம் தொடங்கியது வரவேற்புக்குரியது. எனவே, போராட்டத்தை கைவிட்டு பணியை தொடங்கியுள்ளோம். முகத்துவாரத்தில் படகுகள் இயக்கம் மிகவும் சிரமமாக உள்ளபோதிலும், காலை 9 முதல் 11 மணி வரை, இரவு 9 முதல் 11 வரை கடல்நீர் முகத்துவாரத்தில் ஏறி நிற்கும் நிலையில், படகுகள் இயக்கத்தை செய்துகொள்ளும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விரைவாக தூர்வாரி, முகத்துவாரத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுத்தால், படகுகள் இயக்கத்தில் நிலவும் பாதிப்பு தீரும் என்றனர். படகுகள் இயக்கம் தொடங்கிய நிலையில், அடுத்த 3 நாள்களில் மீன்வரத்து வழக்கமான 
நிலைக்கு வந்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT