காரைக்கால்

மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய பள்ளிக் கட்டடம் ஒரு மாதத்தில் திறக்க ஏற்பாடு

4th Sep 2019 07:08 AM

ADVERTISEMENT

கண் பார்வை குறைபாடு, காதுகேளாதோர் பயிலும் பள்ளிக்கான புதிய கட்டடம் அடுத்த ஒரு மாதத்தில் திறக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுச்சேரி அரசின் சமூக நலத் துறை சார்பில் கண் பார்வை குறைபாடு மற்றும் வாய்பேசாத, காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளி நடத்தப்படுகிறது. காரைக்காலில் உள்ள இத்துறையின்கீழ், இப்பள்ளி தனியார் கட்டடத்தில் மாத வாடகை முறையில் நடத்தப்படுகிறது. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 10 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். உறைவிடப் பள்ளியாக செயல்படும் இப்பள்ளியில், பள்ளிக்கென நிரந்தர துறை ஊழியர்கள் கிடையாது. 
பிற துறை ஊழியர்கள் கண்காணிப்பில் பள்ளி நடத்தப்படுகிறது. காரைக்காலில் மேற்கண்ட குறைபாடுகள் உள்ளோர் பலர் உள்ளபோதிலும், போதுமான இட வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கையில் பிரச்னை நீடித்து வருகின்றன. 
இந்நிலையில், காரைக்கால் காமராஜர் சாலை விரிவாக்கச் சாலையில் சமூக நலத் துறைக்குச் சொந்தமான நிலத்தில், இப் பள்ளிக்கான நிரந்தர கட்டடத்தை புதுச்சேரி அரசு கட்ட முடிவெடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கின. ரூ.1.28 கோடி மதிப்பில் 6 வகுப்பறைகள், அலுவலக கட்டடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இக்கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தால், காரைக்காலில் உள்ள மேலும் சில மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்து பயனடைய முடியுமெனவும், மந்தகதியில் நடைபெறும் கட்டுமானத்தை நிறைவு செய்து, திறப்பு விழா செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரைக்கால் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், 9 மற்றும் பத்தாம் வகுப்பு பயில புதுச்சேரிக்கும், பத்தாம் வகுப்புக்குப் பின் சென்னைக்கு செல்லும் நிலை உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வாறான சிரமத்தை தருவது நியாயமற்ற செயல். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் வகையிலான வகுப்புகளை மேம்படுத்துவதோடு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, சமூக நலத் துறை உதவி இயக்குநர் (பொ) காஞ்சனா செவ்வாய்க்கிழமை கூறியது: கட்டடம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று விட்டன. மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 
இணைப்பு கிடைத்ததும் அதற்கான பணிகள் செய்து முடிக்கப்படும். கட்டடத்தின் உள்புறம் டைல்ஸ் கல் பதித்தல் உள்ளிட்ட பணிகளும் நிறைவுபெற்றுவிட்டன. வளாகத்தில் பல பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்ப்பும் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுமானம் செய்யும் பொதுப்பணித் துறை ஒரு மாத காலத்துக்குள் ஒப்படைப்பதாக கூறியுள்ளது. எனவே, கட்டடடம் துறை வசம் வந்துவிட்டால், உரிய முறையில் திறப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அதன் பிறகு கூடுதல் மாணவர்கள் சேரவும் வாய்ப்பிருக்கிறது என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT