காரைக்கால்

காவல் உதவி மைய சீரமைப்புப் பணி தாமதம்: பேருந்து பயணிகள் அவதி

4th Sep 2019 07:05 AM

ADVERTISEMENT

காரைக்கால் பேருந்து நிலையத்துக்குள் உள்ள காவல் உதவி மைய சீரமைப்புப் பணியின் தாமதத்தால் காவலரை சந்தித்து புகார் தெரிவிப்பதில் மக்கள் தவித்துவருவதாக புகார் கூறப்படுகிறது.
காரைக்கால் பேருந்து நிலைய வளாகத்துக்குள், பேருந்துகள் நிறுத்துமிடத்தில் பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரின் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி, நிலையத்தில் ரோந்துப் பணி மேற்கொள்வதும், பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த மைய கட்டடத்தின் உட்புறத்தின் மேல்தளத்தில் காரைகள் பெயர்ந்து விழுந்ததால், சீரமைப்புப் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்கால் நகராட்சி நிர்வாகம் தொடங்கியது. இதனால், பேருந்து நிலைய கட்டடத்தின் உட்புறத்தில், காவல் துறையினர் தங்களது மையத்தை தற்காலிகமாக அமைத்து பணியாற்றி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் காவல் உதவி மையம் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு காவல் மையத்தில் பணியில் உள்ளார்களா என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் தவிப்பில் செல்வதாக புகார் கூறப்படுகிறது. காவல் உதவி மைய சீரமைப்புப் பணியை நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுவிட்டதாலேயே, காவல் துறையினர் தங்களது மையத்தில் பணியற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியது: பேருந்து நிலையத்தில் ஏதேனும் வழிப்பறி, திருட்டு, கிண்டல் போன்ற சம்பவங்கள், நடத்துநர், ஓட்டுநர் தெரிவிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவே காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் மையத்தில் சீரமைப்புப் பணிகள் செய்வதாகக் கூறி, நிலையத்தின் உட்புறத்தில் காவல் துறையினர் ஒரு அறையில் செயல்படுகின்றனர். இவர்கள் இருக்குமிடம் பயணிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதனால், வெளியூர்களிலிருந்து வருபவர்கள் காவல் உதவி மையம் இருப்பது தெரியாமல் அலைகின்றனர். எனவே, காவல் உதவி மைய சீரமைப்புப் பணியை போர்க்கால அடிப்படையில் முடித்து, காவல் நிலையத்துக்குரிய வகையில் வண்ணம் பூசப்பட்டு, தெளிவான பெயர் பலகை வைத்து விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT