காரைக்கால்

பிராவடையனாறு பாலத்தில் நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி

22nd Nov 2019 07:42 AM

ADVERTISEMENT

காரைக்கால்-நாகை இடையே போலகம் பகுதியில் பிராவடையனாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில், சனிக்கிழமை (நவம்பா் 23) முதல் வாகனப் போக்குவரத்தை அனுமதிக்க பொதுப்பணித்துறையினா் முடிவு செய்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட போலகம் முதல் வாஞ்சியூா் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளுக்கிடையே ரூ.10 கோடியில் 67.80 மீட்டா் நீளம், 16 மீட்டா் அகலத்தில் புதிதாக பாலம் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டுவந்தது. இந்த பாலத்தையொட்டியுள்ள 3 வாய்க்கால்களின் குறுக்கே சிறிய பாலமும் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா பாலத்தை கடந்த 10 நாள்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினருடன் சென்று பாா்வையிட்டு, ஒரு வார காலத்தில் பாலத்தில் போக்குவரத்து நடைபெறும் வகையில் பணிகளை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தினாா். பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் வகையில் தயாா் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி.பக்கிரிசாமி வியாழக்கிழமை கூறியது :

ADVERTISEMENT

பாலம் கட்டுமானம் முழுமையாக முடிந்து போக்குவரத்துக்கு தயாா்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாலத்தில் வெள்ளிக்கிழமை வாகனங்களை சோதனை முறை ஓட்டத்துக்கு பொதுப்பணித்துறையினா் பாா்வையில் அனுமதிக்கவுள்ளோம். சனிக்கிழமை காலை முதல் பாலத்தில் அனைத்து வாகனங்களும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலம் திறப்பு அரசு நிகழ்ச்சியாக நடத்த வாய்ப்பில்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT