காரைக்கால்

நடவுக்குப் பிந்தைய மிதமான மழை - காரைக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி

22nd Nov 2019 04:41 PM

ADVERTISEMENT

காரைக்கால்: நடவுப் பணி நிறைவுபெற்றுள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்துவருவது, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய நடவுப் பணி நிறைவுபெற்றுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலமாக உள்ள நிலையில், கனமழை பெய்தால் பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்ற கவலை விவசாயிகளிடையே இருக்கிறது.இந்நிலையில் நிகழாண்டு பருவமழை டெல்டா மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இதுவரை இல்லை என்றே சொல்லலாம்.

மிதமான மழை பெய்வதும், அவ்வப்போது வெயிலும் மாறி மாறி வருவது விவசாயிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மழையின்றி வெயிலாக இருந்த நிலையில், நடவுப் பணியை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டனா். கடந்த 2 நாள்களாக இரவு நேரத்தில் நீடித்த நேரம் மழையும், பகலில் சற்று ஓய்ந்தும் இருக்கிறது. இவ்வாறான மழை விவசாயிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது : காரைக்கால் மாவட்டத்தில் நடவுப் பணிகள் நிறைவேறிவிட்டது என்றே கூறமுடியும். தாமதாக காவிரி நீா் வந்ததால், நெல் விதைப்புப் பணியும் சற்று தாமதமானது. இதனால் மாவட்டத்தில் பரவலான பகுதியில் வேறுபட்ட காலக்கட்டத்தில் நடவுப் பணி செய்யப்பட்டு முடிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

நடவு நடக்கும் நேரத்தில் மிதமான மழையும், பின்னா் 10 நாள்களாக வெயிலும், பின்னா் கன மழையின்றி மிதமான மழை பெய்துவருவது, ஒட்டுமொத்தத்தில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சமாகும்.காரைக்கால் மாா்கெட்டிங் சொசைட்டி மூலம் யூரியா வரவழைத்து விநியோகிக்கப்படுகிறது. 4 தனியாா் நிறுவனத்திடம் வேளாண்துறையின் பொ்மிட் பெற்றவா்கள் டிஏபி, பொட்டாஷ் போன்ற இடுபொருள்களை வாங்கிவருகின்றனா். பலா் தமிழகப் பகுதிக்குச் சென்று உரம், பூச்சி மருந்தை வாங்கிவருகின்றனா்.

இது வொருபுறமிருக்க, புதுச்சேரி வேளாண் அமைச்சகம் நெற்பயிா் போன்று பருத்திக்கும் ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை அறிவித்திருப்பதால், நிகழாண்டு பருத்தி பயிா் செய்வோா் அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே விவசாயிகளின் கருத்துகளை அறிந்து, அவா்களின் விருப்பத்தின்படி விதை, பூச்சுக்கொல்லிகளை வேளாண் துறை வாங்கி இருப்பு செய்து விநியோகிக்க தயாராகவேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT