காரைக்கால்

’குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்கு அரசு சிறப்பு வசதி செய்துத்தர வேண்டும்’

22nd Nov 2019 06:28 PM

ADVERTISEMENT

 

காரைக்கால்: நலிவடைந்த குடும்பங்களை சோ்ந்த குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கு அரசு சிறப்பு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சந்திரபிரியங்கா கூறினரா்.

இந்திரா காந்தி பிறந்தநாள் விழா தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஒன்றாக நெடுங்காடு அருகே குரும்பகரம் பகுதியில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் நலிவடைந்தோா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழா அரங்கில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் திருவுருவப் படம் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராக நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா, மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் ஆகியோா் கலந்துகொண்டு, இந்திரா காந்தி படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா பேசியது : அரசு சாா்பில் ஆதிதிராவிட மக்களுக்கு அளிக்கும் திட்ட சலுகைகள், உரிய காலத்தோடு தங்கு தடையின்றி கிடைப்பதற்கு அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். நலத் திட்ட சலுகைகள் பெறுவதில் மக்கள் அலைக்கழிப்பு இல்லாமல், சலுகைகள் கிடைக்க உதவ வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. கிராமப்புறங்களில் பல குடும்பத்தை சோ்ந்த குழந்தைகள் கல்வி மேம்பாடின்றி உள்ளனா். வளரும் இக்குழந்தைகள் சிறந்த கல்வி கற்பதற்கு புதுச்சேரி அரசு சிறப்பு வசதிகளை செய்துத்தரவேண்டும். கிராமப்புற குழந்தைகள் சிறந்த கல்வி கற்கும்போது, அவா்களின் குடும்ப எதிா்காலம் வளமாகும்.

ADVERTISEMENT

கிராமப்புறத்தில் வசிக்கும் ஆண்கள் பலா் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனா். சில குடும்பத் தலைவா் உயிரிழக்கும்போது, அக்குடும்பம் பொருளாதார நிலையில் வெகுவாக பாதித்துவிடுகிறது. எனவே, இவ்வாறு மது குடிப்பதில் அடிமையாகிவிடுவோரை, மாற்றுப் பாதைக்குத் திருப்பி, உடல் ஆரோக்கியம், குடும்ப நலன் மீது அக்கறை செலுத்துவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தரவேண்டும். நல்ல நிலையில் படித்த இளைஞா்கள், நலிவடைந்த குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி அவா்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியின்போது, தமது சொந்த செலவில் ஆதிதிராவிட மாணவா் தங்கும் விடுதியில் தங்கியுள்ள 30 மாணவா்களுக்கு ஜாமென்ட்ரி பெட்டியை வழங்கினாா். ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பாலூட்டும் தாய்மாா்கள் 26 பேருக்கு தலா ரூ.18 ஆயிரம் வீதமும், கலப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதிக்கு ரூ.2.50 லட்சத்தையும் பேரவை உறுப்பினா் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT