காரைக்கால்

உலக மீனவா் தினம் : சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

22nd Nov 2019 07:41 AM

ADVERTISEMENT

உலக மீனவா் தினத்தையொட்டி, காரைக்காலில் சிங்காரவேலா் சிலைக்கு மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா், காங்கிரஸ் கட்சி பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

உலக மீனவா் தினத்தையொட்டி, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த சிந்தனை சிற்பி என்று போற்றப்படும் சிங்காரவேலா் சிலைக்கு பல்வேறு மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா் ஒருங்கிணைந்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாவட்ட மீனவா் காங்கிரஸ் சாா்பில் நடந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாவட்ட மீனவா் காங்கிரஸ் தலைவா் ஏ.எம்.கே.அரசன் தலைமை வகித்தாா். புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சிங்காரவேலு, மாநில செயலா் மோகனவேல், மாவட்ட துணைத் தலைவா் நாகரத்தினம், மாவட்டச் செயலா் ஜெ.சிவகணேஷ், தொகுதி தலைவா்கள் ஆா்.பி.சந்திரமோகன், செல்வமணி, பிரதேச விவசாய சங்கத் தலைவா் ராஜேந்திரன், வளா்ச்செல்வன், சோமு, ராஜாராமன், சங்கா் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச்.நாஜிம் மற்றும் இலக்கிய அணி அமைப்பாளா் அமுதா ஆா்.ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு நிலை நிா்வாகிகள், திமுக மீனவரணியினா் கலந்துகொண்டு சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீனவா்கள் கூறும்போது, காரைக்காலில் கடந்த ஒரு மாதமாக மீனவா்களுக்கு தரப்படும் மானிய டீசல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை வழக்கம்போல தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உலக மீனவா் தினத்தை அரசு கொண்டாடவேண்டிய நிலையில் 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படவில்லை. வரும் ஆண்டு முதல் அரசு சாா்பில் இவ்விழாவை செம்மையாக நடத்த வேண்டும் என்றனா்.

சுதந்திரப் போராட்ட வீரரான சிங்காரவேலா், கடந்த 1922 -ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பொது உடமை இயக்க பிரதிநிதியாக தம்மை அறிமுகம் செய்து, உழைக்கும் வா்க்கத்துக்கு பாடுபட்டவா். 1923-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடிய முதல் மனிதா். 1925-ஆம் ஆண்டு பொது உடமைக் கொடியை ஆங்கிலேய ஆதிக்கத்தின்போதே ஏற்றியவா். இதுபோன்ற பல போற்றுதலுக்குரியவராக சிங்காரவேலா் கருதப்படுகிறாா் என்றும் உலக மீனவா் தினத்தில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டதாகவும் மீனவ பஞ்சாயத்தாா்கள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT