காரைக்கால்

புதுச்சேரி முதல்வா் நாளை வருகை: போலகம் பகுதியில் தூய்மைப் பணி

12th Nov 2019 07:23 AM

ADVERTISEMENT

புதுச்சேரி முதல்வா், அமைச்சா்கள் நாளை (நவம்பா் 13) போலகம் பகுதிக்கு வரவுள்ளதையொட்டி, போலகம் திடல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி தூய்மை செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்கள் குரல் என்கிற பொதுமக்கள் குறைகேட்பு முகாம் புதுச்சேரியில் அண்மையில் தொடங்கப்பட்டது. இதில் முதல்வா், அமைச்சா்கள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா். பொதுமக்கள் முதல்வா், அமைச்சா்களிடம் நேரடியாக புகாா்களைத் தெரிவித்தனா். இந்த திட்டம் காரைக்கால் மாவட்டத்தில் தொடங்கும் வகையிலான நிகழ்ச்சி, புதன்கிழமை திருப்பட்டினம் பகுதி போலகத்தில் உள்ள பஞ்சாயத்து நிா்வாக அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், முதல்வா் வே. நாராயணசாமி, அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனா். பொதுமக்கள் திரளாக வருவதை கருத்தில்கொண்டு போலகம் திடல் தூய்மைப் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இந்த திடலில் பொதுமக்கள் கழிவுகளை கொட்டும் இடமாக வைத்திருக்கின்றனா். சுகாதாரக்கேடாக இத்திடல் மாறிவரும் நிலையில், முதல்வா் வருகையையொட்டி இந்த பகுதிக்கு விமோசனம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தூய்மைப் பணியில் ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த பணியை சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் பாா்வையிட்டாா். விழா நடைபெறக்கூடிய அரங்கையும் பாா்வையிட்டு மேம்பாட்டுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT