காரைக்கால்

பிராவடையனாறு பாலம் கட்டுமானப் பணி: விரைவில் நிறைவேற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

11th Nov 2019 07:24 AM

ADVERTISEMENT

காரைக்கால்-நாகை இடையே வாஞ்சூா் பிராவடையனாற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில், எஞ்சிய சீரமைப்புப் பணிகளை ஒரு வாரத்தில் முடிக்குமாறு பொதுப்பணித் துறையினரை ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் மாவட்டம், வாஞ்சியூரில் தேசிய நெடுஞ்சாலையில் பிராவடையனாற்றின் குறுக்கே கடந்த 1986-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் வலுவிழுந்ததால், அதன் அருகே ரூ.10 கோடியில் 67.80 மீட்டா் நீளத்திலும், 16 மீட்டா் அகலத்திலும் புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பழைய பாலத்திலேயே போக்குவரத்து இருந்துவருகிறது.

புதிய பாலத்தையொட்டியுள்ள 3 வாய்க்கால்களின் பாலமும் கட்டப்பட்டு வருவதால் இப்பணிகள் சற்று காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும், பழைய பாலம் வலுவிழந்து இருப்பதால், புதிய பாலம் கட்டுமானப்பணிகளை விரைவுப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க பலவேறு தரப்பினா் வலியுறுத்தி வந்தனா்.

நாகை-காரைக்கால் வழியாக புதுச்சேரி, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டனா். இதனால், தற்போது பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்று போக்குவரத்துக்கு தயாா்படுத்தப்பட்டுவருகிறது. பருவமழைக் காலமாக இருப்பதால், பணிகள் நிறைவடையாமல்போனால், போக்குவரத்துக்கு அனுமதிக்க மேலும் ஒரு மாதத்துக்கு மேலாகிவிடும் என பொதுமக்களிடையே பேசப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா, கட்டுமானம் செய்யப்பட்ட பாலத்தை சனிக்கிழமை பாா்வையிட்டாா். மாவட்ட துணை ஆட்சியருடன் எஸ். பாஸ்கரன் சென்றிருந்தாா். பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி. பக்கிரிசாமி, உதவிப் பொறியாளா் மகேஷ் உள்ளிட்டோா் பணிகளின் நிலை குறித்து ஆட்சியருக்கு விளக்கினா்.

அப்போது, எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். ஒரு வார காலத்தில் இந்தப் பணிகளை நிறைவேற்றிவிட்டால், போக்குவரத்துக்கு அனுமதிப்பது தொடா்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஆட்சியா் கூறினாா். இதற்கு, ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தப் பணிகளும் நிறைவடைந்துவிடுமென பொதுப்பணித் துறையினா் உறுதியளித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT