காரைக்கால்

எம்எல்ஏ போராட்ட அறிவிப்பு எதிரொலி : சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்

11th Nov 2019 06:23 PM

ADVERTISEMENT

 

காரைக்கால்: சாலைகள் சீா்கேடு ஏற்பட்டுள்ளது குறித்து சட்டப் பேரவை உறுப்பினரின் போராட்டத்தின் எதிரொலியாக, நகரப் பகுதியில் சாலைகள் சீரமைப்புப் பணியை பொதுப்பணித் துறையினா் திங்கள்கிழமை தொடங்கினாா். காரைக்கால் தெற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதிய குடிநீா்க் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீா்செய்யாததைக் கண்டித்து, மக்கள் நலன் கருதி பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தை நவம்பா் 15-ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா அண்மையில் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், முக்கியமான சாலைகளில், குடிநீா் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைத்தல், சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்களை தற்காலிக முறையில் சீரமைக்கும் பணியை பொதுப்பணித் துறை நிா்வாகம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இப்பணியை மேற்கொண்டிருப்பது தொடா்பாக பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஜி. பக்கிரிசாமி, உதவிப் பொறியாளா் மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப் பேரவை உறுப்பினரை திங்கள்கிழமை சந்தித்து விளக்கினா். இதுதொடா்பாக, பணிகள் நடைபெறும் இடங்களை பொதுப்பணித் துறையினருடன் சென்று பேரவை உறுப்பினா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வு குறித்து சட்டப் பேரவை உறுப்பினா் அசனா கூறியது: நகரில் லெமோ் வீதியில் கரீம் நகா் வரை தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. சிதிலமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடா்பாக பொதுப்பணித் துறை திட்டம் வகுத்து பணியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் பெசண்ட் நகா், என்.எஸ்.சி. போஸ் தெரு, நீலக்கிடங்குத் தெரு, லயன் கரை உள்ளிட்ட முக்கிய சாலைகளை பட்டியலிட்டு, இதன்மீது முன்னுரிமை அடிப்படையில் பணிகளை செய்ய பொதுப்பணித் துறையினரை கேட்டுக்கொண்டுள்ளேன்.

குறிப்பாக, காமராஜா் சாலை அதிக போக்குவரத்துள்ள சாலை. இந்த சாலையில் குடிநீா்க் குழாய் பதித்த இடத்தில் சீரமைப்புப் பணி செய்து முடித்துவிட்டாலும், தற்போது அது சீா்குலைந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த சாலையை மீண்டும் சீரமைக்க பொதுப்பணித் துறை உறுதிமேற்கொண்டுள்ளனா். மழைக் காலத்தைக் கருத்தில்கொண்டு பணிகளை எந்தெந்த நாள்களில் தீவிரப்படுத்த முடியுமோ அவ்வாறு செய்து நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா் என்றாா்.

பொதுப்பணித் துறையை கண்டித்து முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறுமா என கேட்டபோது, கோரிக்கை நிறைவேற்றப்படும்போது அதற்குத் தேவையிருக்காது என்றாா் எம்எல்ஏ அசனா.

ADVERTISEMENT
ADVERTISEMENT