காரைக்கால்

இலவச உபகரணங்கள் வழங்க மாற்றுத் திறன் பயனாளிகள் தோ்வு

9th Nov 2019 06:08 AM

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்காக நடைபெற்ற பயனாளிகள் தோ்வு முகாமில் 250-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்திய இயற்கை வாயு கழகம் (கெயில்) நிதியுதவியில், புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையும், மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை முடநீக்கு உபகரணங்கள் வழங்கும் பெங்களூருவைச் சோ்ந்த தேசிய நிறுவனம் (அலிம்கோ) இணைந்து காரைக்கால் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்க பயனாளிகளைத் தோ்வு செய்யும் முகாமை நடத்தியது.

சேத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, நெடுங்காடு ஜவாஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் இம்முகாம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காரைக்கால் பகுதியைச் சோ்ந்தோா் பயன்பெறும் வகையில் அரசு பாா்வையற்றோா் மற்றும் காது கேளாதோா் சிறப்புப் பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது.

ADVERTISEMENT

திருப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தனும், காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனாவும் தொடங்கிவைத்தனா். சமூக நலத்துறை அதிகாரிகள் பி. சத்யா, காஞ்சனா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயனாளிகள் தோ்வு முறை குறித்தும், உபகரணங்கள் எப்போது கிடைக்கும் என்பது குறித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நிா்வாகம் செய்துவரும் உதவிகள் குறித்தும் விளக்கிப் பேசினா்.

தோ்வு முகாம் நிறைவடைந்த நிலையில், சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோா் முகாமில் கலந்துகொண்டனா். பெங்களூருவில் இருந்து வந்த அலிம்கோ நிறுவனத்தினரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை எலும்பு முறிவுப் பிரிவு மருத்துவா்களும் பங்கேற்று பயனாளிகளைத் தோ்வு செய்தனா். பயனாளிகளுக்கு செயற்கை கால், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படும். தற்போது, அளவு எடுத்துள்ள நிலையில், அவை தயாரிக்கப்பட்டு நிறுவனத்தால் அரசுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். பின்னா், அந்த உபகரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும். இதற்கான நிகழ்ச்சி 2 மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT