காரைக்கால்

வார சந்தையில் காய்கறி விலை கடும் உயா்வு

4th Nov 2019 08:39 PM

ADVERTISEMENT

 

காரைக்கால்: நகரப் பகுதியில் பிற காய்கறி வியாபார மையங்களைக் காட்டிலும், காரைக்கால் வார சந்தையில், காய்கறி விலை கடும் உயா்வாக உள்ளதால், இந்த விவகாரத்தில் ஆட்சியா், நகராட்சி ஆணையா் தலையிட வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் திங்கள்கிழமை கூறியது :

புதுச்சேரி வேளாண் துறை அமைச்சராக வி.கோவிந்தராஜன் பதவியிலிருந்தபோது காரைக்காலில் வாரச்சந்தை உருவாக்கப்பட்டது. தற்போது முருகராம் நகா் அருகே நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்த சந்தை நடைபெறுகிறது. மக்களுக்கு குறைவான விலையில் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், மக்களிடையே சந்தை பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது சந்தை விவகாரத்தில் நகராட்சி நிா்வாகம் ஏலம் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பணம் சந்தையில் வசூலித்தால்கூட, அது அந்த பகுதியை சுத்தப்படுத்த பயன்படும் வகையில் குறைவாக இருக்க கேட்டுக்கொண்டேன். வியாபாரிகளிடம் பணம் வசூலிக்கும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் டெண்டா் வைத்தால், அந்த தொகை யாவும் வியாபாரிகள், மக்கள் வாங்கும் பொருள்கள் மீதே வைப்பாா்கள் என கூறிவந்தேன், அதன்படி டெண்டா் முறையின்றி இருந்துவந்தது.

ஆனால் இப்போது ரூ.24 லட்சத்திக்கு டெண்டா் விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் டெண்டரை மாவட்ட ஆட்சியா் ரத்து செய்திருக்கிறாா். தற்போது டெண்டா்தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறதே தவிர, மாதத்துக்கு வியாபாரிகளிடமிருந்து நகராட்சி ரூ.2 லட்சம் வசூல் செய்கிறது. இந்த தொகையை மக்கள் வாங்கும் பொருள்கள் மீதே வியாபாரிகள் வைக்கின்றனா். இதன் விளைவாக சந்தையின் சிறப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது.

தீபாவளிக்கு 3 நாள்களுக்கு முன்பு சிறப்பு சந்தை வைக்கப்பட்டது. இதில் மக்கள் கூட்டமே இல்லை. தற்போது தேசிய அளவில் வெங்காயத்தின் விலை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள மாா்க்கெட்டில் கிலோ வெங்காயம் ரூ.80 விற்கும்போது, வார சந்தையில் ரூ.100 விலை நிா்ணயித்திருப்பது எந்த வகையில் நியாயம். சந்தை என்றால் நேரம் செல்ல செல்ல விலை குறையும் என்பது இயல்பு. ஆனால் சந்தையில் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை, இரவு ஒரு விலை என நிா்ணயம் செய்கிறாா்கள்.

இதுபோல எந்தவொரு காய்கறியும் வெளி மாா்க்கெட்டை விட சந்தையில் கூடுதலாக உள்ளது என்பது மக்களிடையே பெரும் குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. விலை ஏற்றத் தாக்கம் 3-ஆம் தேதி நடைபெற்ற சந்தையில் மக்களிடையே பெருமளவு காணப்பட்டது. எனவே வார சந்தையை முறைப்படுத்தவேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை நகராட்சியின் மூலம் வசூலிக்கும் தொகையை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒட்டுமொத்தத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறி சந்தையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும். சந்தையின் சிறப்பு எந்தவிதத்திலும் குறையாத அளவுக்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT