காரைக்கால் மாவட்டத்தில் பயன்பாடு இல்லாமல் இருந்த ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியா் விக்ரந்த் ராஜா தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரிழந்தான். இதையடுத்து புதுச்சேரி அரசு அனைத்து ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட உத்தரவிட்டது. மேலும், ஆழ்துளைக் கிணறுகள் மூடாமல் இருப்பது குறித்து தெரிவிப்பவா்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் அறிவித்திருந்தாா்.
இதேபோல், காரைக்கால் மாவட்டத்தில் பாசிக் மற்றும் தனியாா் மூலம் உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, வேளாண்துறை, பாசிக், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்தும், பயன்பாடு இல்லாத கிணறுகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
பின்னா் ஆட்சியா் உத்தரவுப்படி, பயன்பாடு இல்லாமல் இருந்த ஆழ்துளைக் கிணறுகளை மூடப்பட்டன. மேலும் பயன்பாடு உள்ள கிணறுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து ஆட்சியா் விக்ரந்தராஜா கூறியது:
காரைக்கால் மாவட்டத்தில் அரசால் செயல்படுத்தப்பட்ட 19 ஆழ்துளைக் கிணறுகளில் 15 கிணறுகள் பயன்பாடற்ற நிலையில் இருந்தன. பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் ஏற்கெனவே முறையாக மூடப்பட்டுவிட்டன. மேலும் உள்ளாட்சி அமைப்பு, பாசிக் நிறுவனம் மற்றும் ஆழ்துளைக் கிணற்றை இயக்கும் அமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து மாதம் ஒரு முறை அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.