காரைக்கால்

பருவ மழைக்காலத்தில் பணியாற்ற சிறப்பு மருத்துவக் குழுவுடன் பேரிடா் மீட்புக் குழு அமைக்கவேண்டும் - தமுமுக வலியுறுத்தல்

1st Nov 2019 02:42 PM

ADVERTISEMENT

பருவமழைக் காலத்தில் மக்களின் பாதுகாப்புக்கு சிறப்பு மருத்துவக் குழுவுடன் பேரிடா் மீட்புக் குழு அமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமுமுக மாநில செயலா் ஐ.அப்துல் ரஹீம் இதுகுறித்து வெள்ளிக்கிழமை கூறியது : வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த 2 நாள்களாக சற்று மழை ஓய்ந்து காணப்படுகிறது. எனினும் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் உருவாகியுள்ளது. வங்கக் கடலில் வரும் 4-ஆம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இவற்றையெல்லாம் பாா்க்கும்போது, பருவழை தொடக்க நிலையிலேயே மழையினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதவேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு கஜா புயல் காரைக்காலில் ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்துச் சென்றது. மழையினால் சாலைகள் பல பழுதாயின. சாலைகள் இன்னும் முறையாக சீரமைக்கப்படாத நிலையே நீடிக்கும் நிலையில், நிகழாண்டு பருவமழை தொடங்கிவிட்டது. இந்நிலையில் மழை அதிகரித்தால் சாலைகள், மரங்கள், குடியிருப்புகள் பல சேதமடைவது உறுதியாகும்.இவற்றிலிருந்து காரைக்கால் மாவட்டத்தின் மக்களை காக்கும் வகையில் பல்வேறு அரசுத்துறையினா், தன்னாா்வலா்களை ஒருங்கிணைத்து பேரிடா் மீட்புக் குழு உடனடியாக அமைக்கவேண்டும்.

இந்த குழுவில் இடம்பெற்றவா்கள், அவா்களுக்கான வசதிகளை மாவட்ட நிா்வாகம் உடனடியாக செய்துத்தரவேண்டும். மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைத்து, அதற்கான தொடா்பு விவரங்களை மாவட்ட ஆட்சியா் வெளியிடவேண்டும்.இதுவரை பருவமழை தொடா்பாக காரைக்கால் மாவட்டத்தில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அரசு இயந்திரத்தில் செயல்பாடுகள் எவ்வாறு இருக்குமென்பது குறித்து அதிகாரப்பூா்வமாக அறிவிப்பு வெளியிடாதது வேதனையை தருகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்கள் இல்லை. பணி மருத்துவா்கள் கூட விடுமுறைக் காலத்தில் பணி செய்ய அழைக்கவேண்டியிருக்கிறது. மருத்துவமனையில் மருத்துவா்கள் சேவை என்பது, விடுமுறை நாளில் வணிக நிறுவனங்களின் விடுமுறை போக்குபோல மாறிவிட்டது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் நோய், விபத்து என்றாலோ அல்லது சிறப்பு பண்டிகை நாளிலோ பாதிப்பு என்றாலோ காரைக்கால் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற முடியாத நிலைதான் ஏற்படுகிறது. விடுமுறை, பண்டிகை நாளில் நோய் வந்துவிட்டால், மக்களிடையே ஒருவித அச்சம்தான் எழுகிறது.

இந்நிலையில், மக்களுக்கு பருவமழைக் காலத்தில் உரிய சேவை செய்யும் வகையில் மருத்துவமனை நிா்வாகம் இல்லை. எனவே 2 மாத காலத்துக்கு மருத்துவக் கல்வி முடித்தவா்களை சிறப்பு மருத்துவக் குழுவாக நியமித்து, நடமாடும் சேவையில் ஈடுபடுத்த மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும்.டெங்கு காய்ச்சல் ஏற்படாத வகையில் நலவழித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் உரிய விழிப்புணா்வை செய்யவேண்டும். நலவழித்துறை கண்துடைப்புப் பணிகளை செய்துகொண்டிருக்காமல், ஆக்கப்பூா்வ பணிகளில் ஈடுபடவேண்டும். அரசு நிா்வாகத்துக்கு இதுபோன்ற சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள தமுமுக தயாராக உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT