மனிதனின் சராசரி வருவாயைக் காட்டிலும், போதைக்காக செலவு செய்யும் தொகை அதிகமாக உள்ளதாக துணை ஆட்சியர் வேதனை தெரிவித்தார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை இணைந்து மாணவர்கள் போதைத் தடுப்பு தொடர்பான என்.ஏ.பி.டி.டி.ஆர். என்கிற தேசிய செயல் திட்டமாக, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறது. காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) எம்.ஆதர்ஷ் தொடங்கி வைத்துப் பேசியது:
மாணவர்கள், பொதுமக்கள் யாவரும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருக்கவும், போதைப் பழக்கத்திலிருந்து விடுபடவும் அரசு நிறைய நிதி ஒதுக்கி, திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆயினும் போதைப் பழக்கம் கட்டுப்பாட்டுக்குள் வருவதில் குறை
இருக்கிறது.
மனிதனின் சராசரி வருவாயைவிட, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் செலவுதான் அதிகமாக இருக்கிறது. இதை அனைவரும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டியது அவசியமாகும்.
மாணவப் பருவத்தில் படிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த பருவத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருந்தால், நீங்கள் (மாணவர்கள்) வாழ்க்கையில் பாதி வெற்றியை பெற்றுவிட்டதாகக் கூறலாம். நண்பர்கள் போதை போன்ற தீய பழக்கத்துக்கு ஆளாமகாமல் இருக்க சக மாணவர்களின் ஆலோசனை மிகவும் முக்கியமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த விவகாரத்தில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். தற்போதைய கல்விச் சூழல் போட்டிகள் நிறைந்து, மிகவும் கடுமையாக இருக்கும்போது, நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்ற உயரிய சிந்தனையில் மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கல்விக்கான வசதிகள் நமது மாநிலத்தில் நல்ல விதத்தில் அமைந்திருப்பதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஜிப்மர் மருத்துவர் எல்.கார்த்திக் பானர்ஜி போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். போதைப் பொருள் பயன்பாட்டில் உள்ள சட்ட விதிமுறைகள் குறித்து வழக்குரைஞர் மார்ட்டின் பேசினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருள்களை துணை ஆட்சியர் வழங்கினார். சமூக நலத்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) காஞ்சனா வரவேற்றார். கல்லூரி பேராசிரியர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.