காரைக்கால்

மரக்கன்றுகள் நடுவதன் பயன்குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

31st Jul 2019 07:11 AM

ADVERTISEMENT

மேலவாஞ்சூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நடுவதன் பயன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
கடந்த ஆண்டு வீசிய கஜா புயலினால்  காரைக்காலில் ஆயிரக்கணக்கான மரக்கன்று சாய்ந்தன. இவற்றுக்கு ஈடாக புதிதாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அரசுத் துறையினர், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனத்தினர், பொதுமக்கள் முன்வரவேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுதவிர, விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டு நீர்நிலையோரத்தில் புதைக்கும் பணிகளையும் தன்னார்வ அமைப்புகள் செய்துவருகின்றன.
இந்நிலையில், திருப்பட்டினம் கீதாஆனந்தன் அறக்கட்டளை சார்பில் நிரவி - திருப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் சுமார் 3 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் நடும் திட்டப் பணி கடந்த வாரம் தொடங்கியது. திருப்பட்டினம் கொம்யூன், மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை  மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று தரும் நிகழ்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக  நடைபெற்றது.  சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பேசினார்.
மாணவர்களுக்குத் தரப்படும் மரக்கன்றுகள் ஒவ்வொன்றும் நீண்ட ஆயுளுடன் இருக்கக் கூடிய வகைகளைச் சேர்ந்தது. இதை பெற்றோர்களிடம் ஒப்படைத்து வீட்டின் கொல்லைப்புறம் மற்றும் இடவசதிகளைப் பொறுத்து நட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். 
பாடம்  படிப்பதோடு இப்பணியையும் மாணவர்கள் ஆர்வத்துடன் செய்யவேண்டும். நிழல் கிடைப்பதோடு மட்டுமல்லாது, மழை, சுகாதாரமான காற்று உள்ளிட்ட பல காரணங்களுக்கு மரங்கள் அவசியமாவதை கருத்தில் கொண்டு, அறக்கட்டளை சார்பில் இவை வழங்கப்படுகிறது என்றார் அவர். 
ஆசிரியர்கள் பலரும் மாணவர்களுக்கு பல்வேறு கருத்துகளை விளக்கிக் கூறினர். இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறியது: தொகுதியில் சுமார் 3 ஆயிரம் மாணவர்களுக்கு பூவரசு, வேம்பு, நாவல், புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. தொகுதியில் ஏறக்குறையை 50 சதவீதத்துக்கு மேலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT