மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவை எதிர்த்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காரைக்காலில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கட்சி முடிவின்படி தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பு முடிந்து வந்த மாணவர்களிடமும், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடமும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, கையெழுத்து இயக்கமாக எதிர்ப்பு கையெழுத்துப் பெற்றனர். இதுகுறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியது: மத்திய பாஜக அரசு நாட்டின் பன்முகத் தன்மைக்கு கொஞ்சமும் பொருந்தாத புதிய கல்விக் கொள்கையை கொண்டுவரவுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்தால் நாட்டின் எந்தவொரு மாநிலமும், மாநில பாடத் திட்டம் என்று வரையறுத்து மாணவர்களுக்கு போதிக்க முடியாத நிலை ஏற்படும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் யாவும் தனியார் மயமாகிவிடும். நாட்டின் பன்முகத் தன்மை சிதைவடைந்துவிடும். கல்வியில் பல்வேறு நிலையில் மாநிலத்தின் உரிமைகளை பறித்துவிட்ட மத்திய அரசின் செயல்பாடுகளில் தமிழகம், புதுவை மாணவர்கள் பெரிதும் பாதித்துள்ளனர். இதற்கிடையில், இந்த புதிய கல்விக் கொள்கை கொண்டுவருவது ஏற்புடையதாக கருத முடியாது.
எனவே, இதை அரசியல் சார்பாக கருதாமல் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்றனர். இந்த இயக்கத்தில் புதுச்சேரி மாநிலச் செயற்குழு உறுப்பினர் அ. வின்சென்ட், வட்டச் செயலர் எஸ்.எம். தமீம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.எம். கலியபெருமாள், என். ராமர், அ. திவ்யநாதன், ஜி. துரைசாமி, ஆர். ராமகிருஷ்ணன், அ. பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.