காரைக்கால்

ஆக.4-இல் வெள்ளத் தடுப்பு ஒத்திகை: ஆட்சியர் தகவல்

30th Jul 2019 07:02 AM

ADVERTISEMENT

காரைக்காலில் ஆக.4-ஆம் தேதி கடற்படை மற்றும் அரசுத் துறைகள்  ஒருங்கிணைந்து வெள்ளத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்தார். 
தேசிய பேரிடர் மீட்பு அமைப்பானது தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வெள்ளம் வந்தால் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆக.2 முதல் 5-ஆம் தேதி வரை ஒத்திகை, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அரசசுத் துறையினருடன் இணைந்து நடத்தவுள்ளது.
இதுதொடர்பாக காரைக்கால் மாவட்டத்தில் எந்த பகுதியில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது, அரசுத் துறையினர் பங்களிப்பு என்ன என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பேரிடர் மீட்பு அமைப்பின் திட்டங்கள் குறித்து துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் பேசினார்.  இதுகுறித்து, ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: தேசியப் பேரிடர் மீட்பு அமைப்பு ஆண்டு பேரிடர் தொடர்பான ஒத்திகை, விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சியை தமிழகம், புதுச்சேரியில் நடத்தவுள்ளது. இந்த நிகழ்வு இந்திய கடற்படை, தேசியப் பேரிடர் மீட்புக்குழு, அரசுத் துறைகள் இணைந்து ஆக.2 முதல் 5-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. வெள்ளம் வந்தால் நகரப் பகுதியில் எவ்வாறான பாதிப்பு ஏற்படும், முன்னேற்பாடுகள் என்ன, பாதிப்புகளில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்வு நடத்த, காரைக்கால் நகரப் பகுதியில் புதுத்துறை பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒத்திகை நேரம் உள்ளிட்ட பிற  நடவடிக்கைகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். இந்த ஒத்திகையில் பொதுமக்களின் பங்களிப்பு மிக முக்கியயம். இதில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் பங்கேற்பார்கள். வெள்ளம் வரும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம்  எவ்வாறான ஏற்பாடுகளை செய்யும் என்பது குறித்து மக்களுக்கு புரிதலும், அரசுத் துறையினர் தாம் எவ்வாறெல்லாம் தயாராக இருக்கவேண்டுமென்ற அனுபவமும் இதன்மூலம் ஏற்படும் என்றார் ஆட்சியர். முன்னதாக கூட்டத்தில், துணை ஆட்சியர் (வருவாய்) எம். ஆதர்ஷ்,  மண்டல காவல் கண்காணிப்பாளர் டி. மாரிமுத்து, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்கள் ஜி. பக்கிரிசாமி, எஸ். பழனி,  நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT