காரைக்கால்

50 ஆண்டுகளுக்குப் பின் குளங்கள் தூர்வாரும் பணி: பொதுமக்கள் பாராட்டு

29th Jul 2019 07:34 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு பகுதியில் கோயில் கிராமங்களின் குளங்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், அரசு நிர்வாகத்தின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் நிர்வாக நிதியில், கோயிலுக்குச் சொந்தமான அத்திப்படுகை, பூமங்களம், பேட்டை உள்ளிட்ட 5 கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் சுமார் 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலேயே உள்ளவற்றை தூர்வாரும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. 
இக்குளங்களில் பெரும்பான்மையானவை தூர்வாரப்பட்டுள்ள நிலையில், இப்பணியை வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், கோயில் நிர்வாக அதிகாரி ஜெ. சுந்தர் மற்றும் பொறியாளர் குழுவினருடன் சனிக்கிழமை சென்று பார்வையிட்டார். குளங்கள் தூர்வாரும் பணிகள் திருப்தியளிப்பதாக கோயில் நிர்வாகத்தினர், பொதுப்பணித் துறையினருக்கு அமைச்சர் தெரிவித்தார். கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், தங்களது கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளாக குளங்கள் தூர்வாரப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி, சரியான நடவடிக்கை எடுத்தமைக்காக அமைச்சர் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
அப்போது கிராமத்தினரிடையே அமைச்சர் பேசியது: திருநள்ளாறு மட்டுமல்லாது திருப்பட்டினம், நிரவி, கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள குளங்களும் தூர்வாரப்படுகின்றன.
தூர்வாரப்படும் பணிகளை செய்த பின்னர் காவிரி நீர் அல்லது மழை மூலம் குளங்களில் தண்ணீர் நிரம்பிவிடும். எனவே, குளங்களை ஆக்கிரமிக்காமலும், குளங்களில் கழிவுகளை விடாமலும், நீர் வரும் வழிகளை அடைக்காமல் பாதுகாக்கவேண்டியது அந்தந்த கிராமத்தினர் பணியாகும்.
கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒருங்கிணைந்து குளங்களை பாதுகாக்க முன்வரவேண்டும். நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் மழை பெய்து தண்ணீர் விரயமாகிறது. எனவே, சரியான திட்டமிடலுடன் காரைக்காலில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி மேற்கொள்வதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இது நிலத்தடி நீராதாரப் பெருக்கத்துக்கும், பிற தேவைக்கும் உகந்த செயலாகும் என்றார் கமலக்கண்ணன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT