காரைக்கால்

வாகனப் புகை சோதனை மையம் காரைக்காலில் அமைக்க வலியுறுத்தல்

27th Jul 2019 07:34 AM

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் மாசினைக் கட்டுப்படுத்த வாகனப் புகை சோதனை மையம் காரைக்காலில் அமைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  
திருமலைராயன்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நுகர்வோர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதற்கான தீர்மானத்துடன் பிற தீர்மானங்கள்: புதுச்சேரியில் ஆக.1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்ட நலத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம். கந்தசாமிக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வது, பயன்பாட்டில் உள்ள இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களுக்கு அதன் உற்பத்தி ஆண்டு, தர மதிப்பீட்டுக்கு ஏற்றார்போல் ஒரே மாதிரியான வாகன காப்பீட்டுக் கட்டணங்களை நிர்ணயிக்க ஐ.ஆர்.டி.ஏ. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெருநகரங்களுக்கு நுழையும் பகுதியிலேயே வாகனத்தின் புகையை அளவிடும் வகையிலான சோதனை மையம் உள்ளது. அதுபோல, சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்தவும், அனைத்து வாகன ஓட்டிகளும் வாகனப் புகைச் சோதனை சான்று பெறும் வகையில், காரைக்காலில் வாகனப் புகைச் சோதனை மையம் அமைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியோர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையை, மாதத்தின் முதல் வாரத்திலேயே வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சங்கத் தலைவர் எஸ். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கச் செயலர் ஆர். குணசேகரன், துணைத் தலைவர் ஏ.எஸ். ரமேஷ், இணைச் செயலர் எஸ். வீரமணி, பொருளாளர் என். ரவி மற்றும் எஸ். சகுந்தலா, வி. சிவராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கௌரவத் தலைவர் எம். ராஜதுரை செய்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT