தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்த வழக்கிலும், கலப்பட டீ தூள் பயன்படுத்திய வழக்கிலும் 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி எம். ரவிச்சந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்திய சோதனையில், தேநீர் கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டு 5 கடையின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தார். மேலும், நிரவி பகுதி ஹைவே நகரில் ஒருவர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவந்த நிலையில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நீதிபதியுமான ஏ. விக்ரந்த் ராஜா முன்னிலையில் இறுதி விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, 6 வழக்குகளிலும் குற்றம் உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரி எம். ரவிச்சந்திரன் கூறியது: கடந்த 2018-ஆம் ஆண்டு உணவகங்கள், தேநீர் கடைகள் பலவற்றில் சோதனை நடத்தியபோது, காரைக்கால் பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவகத்தில் கலப்பட டீ தூள் பயன்படுத்தி தேநீர் விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல், 4 சிறிய தேநீர் கடைகளில் வண்ணத்தூள் கலந்த கலப்பட டீ தூள் மூலம் தேநீர் விற்பனை செய்தது தெரியவந்தது. இவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள புதுச்சேரியில் உள்ள ஆய்வகத்துக்கு டீ தூள் அனுப்பி வைக்கப்பட்டது. இது இயற்கையான டீ தூள் அல்ல என்றும், கலப்படமானது என ஆய்வறிக்கை கிடைத்தது. இதுதொடர்பாக, இந்த 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் நிரவி பகுதி வீட்டில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் மற்றும் 4 தேநீர் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த நபருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.