திருநள்ளாறில் 40 ஆண்டுகளுக்குப் பின் கோயில் கிராமங்களின் குளங்கள் தூர்வாரம் பணி நடைபெறுகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை பார்வையிட்டு மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் மீட்டெடுத்து தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் நீர்நிலைகளை சீர்படுத்தி, தண்ணீர் வரும் காலத்தில் சேமித்து வைக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் கோயில்களும், குளங்களும் எண்ணிக்கையில் மிகுதியானவை என்ற பெயர் உண்டு. கோயில்கள் காணப்பட்டாலும், குளங்கள் பல ஆக்கிரமிப்புகளால் மறைந்தும், குறுகியும் போய்விட்டது. பல குளங்களில் தண்ணீரின்றி புதர் மண்டியுள்ளதோடு, கழிவுகள் சேருமிடமாக்கப்பட்டுவிட்டது.
நல்லம்பல் பகுதியில் உள்ள ஏரியை முழுமையாக தூர்வாரி நிகழாண்டே பருவமழையின்போது தண்ணீர் சேமிக்க நடவடிக்கையும், பிற சிற்றேரிகள் வெட்டும் திட்டத்தை தீவிரப்படுத்தவும், மறைந்துபோன குளங்களை மீட்டெடுத்தல், பிற குளங்களை தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் சிறப்புத் திட்டமாக வகுத்து செயல்படுத்தி வருகிறது. பிரதானக் கோயில்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட குளங்களை தத்தெடுத்து தூர்வார மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பேட்டை, அத்திப்படுகை, பூமங்களம் உள்ளிட்ட 5 கிராமங்களில் ஏராளமான குளங்கள் உள்ளன. இவற்றை கோயில் நிதியின் மூலம் தூர்வாரவும், மறைந்த குளங்களை மீட்டெடுக்கவும் கோயில் நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி கோயில் கிராமங்களில் 25 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை தூர்வாரும் பணியை கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பேட்டை கிராமத்தில் நடந்த இப்பணியை மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா வியாழக்கிழமை பார்வையிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாத்தல் திட்டத்தில் மறைந்த குளங்களை மீட்டெடுத்தல், பிற குளங்களை தூர்வாரி தண்ணீரை சேமிக்கும் வகையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசுத் துறைகள் ஒவ்வொன்றும் குளங்களை தத்தெடுத்து தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகம் சார்பில் குளங்களை தேர்வு செய்துள்ளோம், அவற்றை வரும் ஜூலை 20-ஆம் தேதி முதல் முதல் தூர்வார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான 5 கிராமங்களில் உள்ள குளங்கள் அறியப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான குளங்கள் தூர்வாரி 40 ஆண்டுகளுக்கும் மேலாவதாக கூறப்படுகிறது. தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம் தீவிரமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் அடுத்த ஓரிரு மாதங்களில் மாவட்டம் முழுவதும் முழுமையாக நிறைவுபெற்றால், காவிரி வரத்தின்போதும், பருவமழைக் காலத்திலும் முறையாக தண்ணீரை சேமிக்க முடியும்.
இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, காரைக்கால் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்காத நிலை ஏற்படும். பொதுமக்கள், தன்னார்வலர்கள் எவ்வாறு மரக்கன்று நட்டு பசுமையான காரைக்காலுக்கு முயற்சி செய்யவுள்ளனரோ அதுபோல நீர் நிலைகளை பாதுகாக்கத் தேவையான ஒத்துழைப்பைத் தரவேண்டும் என்றார் ஆட்சியர்.