அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர விண்ணப்பிக்காதவர்கள் இறுதி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே. கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 1 சேர்க்கை அந்தந்த பள்ளிகளில் கலந்தாய்வு மூலம் ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டன. இதன்தொடர்ச்சியாக மீதமுள்ள இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்த கல்வித் துறை தீர்மானித்துள்ளது. இதுவரை பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து எந்தவொரு பள்ளியிலும் இடம் கிடைக்காத மாணவர்களும், அண்மையில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு துணைப் பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தகுதியுள்ள மாணவ மாணவிகள் தங்களின் இணையதள மதிப்பெண் நகல், நிரந்தர ஒருங்கிணைந்த பிக் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டி.சி) போன்ற ஆவணங்களுடன் காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் மேற்கண்ட பள்ளியில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 18-ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும். கலந்தாய்வு ஜூலை 19-ஆம் தேதியும், வகுப்புகள் ஜூலை 22-ஆம் தேதியும் தொடங்குகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.