சென்டாக் சேர்க்கை முறையால், அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என எம்.எல்.ஏ. புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து, நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரியங்கா வெள்ளிக்கிழமை கூறியது:
புதுச்சேரி உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு கலைக் கல்லூரி, பொறியியல், கால்நடை உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை, பழைய முறைகளை மாற்றி, ஒருங்கிணைந்த முறையில் சென்டாக் அமைப்பு மூலம் தொடங்கியது.
கடந்த ஆண்டு முதலாமாண்டு என்பதால் அரசுத்துறையும், மாணவர்களும், பெற்றோர்களும் ஒருவித குழப்பத்திலேயே இருந்தனர். இந்த குழப்பங்கள் அடுத்த ஆண்டு தீர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், புதுச்சேரி உயர்கல்வித் துறை எந்தவித பிரச்னைக்கும் உரிய தீர்வை ஏற்படுத்தாமல், 2-ஆம் ஆண்டாக சென்டாக் முறையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு வேண்டுமானால் இம்முறை ஏற்புடையதாக இருக்கலாம். அரசு கலைக் கல்லூரியில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையினர் விண்ணப்பிக்கின்றனர். இவர்களுக்கு இந்த சேர்க்கை முறை ஏற்புடையதாக இருக்கவில்லை.
காரைக்கால் மாணவர்களுக்கு காரைக்கால் கல்லூரியில் இடம் கிடைக்காமல், புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்தால், ஏழை மாணவர்களால் தங்கி, செலவு செய்து படிக்க இயலாது. இது கடந்த ஆண்டு சேர்க்கையிலேயே தெளிவாகிவிட்ட ஒன்றாகும்.
மேலும், சென்டாக் சேர்க்கை முறை புதுச்சேரி மாநிலத்தில் காலத்தோடு செய்து முடிக்கப்படவும் இல்லை. இப்போதுதான் மாணவர்கள் விண்ணப்பித்த விவரத்தை வெளியிட்டுள்ளனர். மாணவர்கள் தங்களது பெயர், மதிப்பெண் போன்றவற்றை சரிபார்த்து, திருத்தம் இருப்பின் தெரிவிக்கவேண்டும். இதன் பிறகு பரிசீலித்து சேர்க்கை ஆணை தருவதற்கு ஜூலை மாத இறுதியாகிவிடும். இதனால், மாணவர்களில் பலர் தனியார் கல்லூரிகளை நோக்கி படையெடுக்கின்றனர். எனவே, சென்டாக் முறையை ரத்து செய்துவிட்டு, பழைய முறையை மீண்டும் கொண்டுவரவேண்டும். இதுகுறித்து, புதுச்சேரி உயர்கல்வித்துறை அமைச்சகம் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக, புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விரிவான விவாதம் செய்ய திட்டமிட்டுள்ளேன்
என்றார் அவர்.