காரைக்கால்

ஆரோக்கியம் திட்டம்: மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பயிற்சி

6th Jul 2019 07:03 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் ஆரோக்கியம் திட்டம் குறித்து மருத்துவர்கள், கிராமப்புற செவிலியர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் நலவழித் துறை மற்றும் குடும்ப நலத் துறையின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ்  ஹெல்த் அண்டு வெல்னஸ் என்கிற ஆரோக்கியத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. 
காரைக்கால் மாவட்டத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முன்னேற்பாடுகளை புதுச்சேரி நலவழித்துறை செய்துவருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மருத்துப் பணியாளர்களை தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், கிராமப்புற செவிலியர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை புதுச்சேரி நலவழித் துறை இயக்குநர் மருத்துவர் கே.வி. ராமன் தொடங்கிவைத்து, இந்த திட்டத்தின் நோக்கம், திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது மருத்துவர்கள், கிராமப்புற செவிலியர்களின் பணிகள் குறித்தும்,  ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.
தேசிய சுகாதார இயக்கத்தின் புதுச்சேரி இயக்குநர் மருத்துவர் மோகன்குமார் திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கிப் பேசினார். 
நலவழித்துறை சார்பில் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு செய்யும் சேவைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து விளக்கிக் கூறினர்.
பின்னர், நலவழித்துறை துணை இயக்குநர் மருத்துவர் மோகன்ராஜ் இந்தப் பயிற்சி குறித்து கூறியது:
மத்திய அரசின் ஹெல்த் அண்டு வெல்னஸ் என்கிற ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மருத்துவ மையங்களில் நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்யக்கூடிய கருவி பொருத்தப்படும். இந்த கருவி மூலம் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்  உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்து அறிந்துகொள்ள முடியும். கிராமப்புறத்தில் உள்ள கர்ப்பிணிகள் துணை மையத்தின் இந்த சேவையால் சிறந்த பயனடைவர். 
காரைக்கால் மாவட்டத்தில் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு சமுதாய நலவழி மையம், 17 துணை சுகாதார மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடிய வகையில் கட்டமைப்பு வசதிகள் இருக்கவேண்டும். குறிப்பாக யோகாவுக்கான தளமும் இருக்கவேண்டியுள்ளது. அடுத்த 3 மாத காலத்துக்குள் இந்த கட்டமைப்புகளை காரைக்காலில் ஏற்படுத்தவேண்டியுள்ளது. அதன் பிறகு திட்டம் தொடங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு அளிக்கிறது என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT