காரைக்கால்

ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்: ஆட்சியரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்

6th Jul 2019 07:03 AM

ADVERTISEMENT

ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என ஆட்சியரிடம் சட்டப்பேரவை உறுப்பினர் வலியுறுத்தினார்.
காரைக்காலில் வருவாய்த் துறை சார்பில் வழங்கப்படும் குடியிருப்பு, குடியுரிமை, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள் பெற பொது சேவை மையத்திலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்துகொள்ளும் திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
பொது சேவை மையம் எத்தனை காரைக்காலில் உள்ளது, எங்கெங்கு உள்ளது என்ற விவரம் மக்களுக்கு போதிய அளவில் தெரியவில்லை. பல மையங்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் மக்களிடையே புகார் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வருவாய்த் துறை சான்றிதழை பொது சேவை மையத்துக்குச் சென்று பதிவு செய்து பெறும் வகையில் நடைமுறை சிக்கலை கிராமப்புற மக்கள் உள்ளிட்டோர் சந்தித்துவருகின்றனர்.
காரைக்காலில் கூடுதலான பொது  சேவை மையங்களை ஏற்படுத்தவேண்டும், ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் எவ்வளவு தொகை வசூலிக்கவேண்டுமென்ற விதிமுறை வகுக்கவேண்டும். திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் திடீரென அமல்படுத்தியதை பல்வேறு தரப்பினர் எதிர்க்கின்றனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா வெள்ளிக்கிழமை ஆட்சியரகத்தில் சந்தித்து இப்பிரச்னை குறித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பேரவை உறுப்பினர் தரப்பில் கூறும்போது, "ஆன்லைன் திட்டம் தொடங்கும் முன்பாக விண்ணப்பித்தோருக்கு பழைய முறையிலேயே சான்றிதழ் வழங்கவேண்டுமென ஆட்சியரிடம் எடுத்துக்கூறப்பட்டது. வருவாய்த்துறை அலுவலகத்திலேயே மக்களின் சிரமத்தைப் போக்க கல்லூரிப் படிப்பு முடித்தோர் அல்லது சுய உதவிக்குழுவினருக்கு உரிய பயிற்சி அளித்து மக்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பு செய்து உதவவேண்டும்.
பொது சேவை மையத்தினருக்கும் உரிய பயிற்சியும், உரிய ஆலோசனைகளும் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவற்றை கேட்டுக்கொண்ட ஆட்சியர், உரியவர்களுக்கு பயிற்சி அளித்து வருவாய்த்துறை அலுவலகத்தில் தனி பிரிவு செயல்பட ஏற்பாடு செய்வதாகவும், ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுவதில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், அதனை விரைவாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறியதாகவும்' தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT