காரைக்கால்

அரசு பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நீக்கம்: திமுக கண்டனம்

6th Jul 2019 07:03 AM

ADVERTISEMENT

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பாடத் திட்டத்தை நீக்கியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: 
பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அனுமதியுடன் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவில் (ஐ.டி.) நிகழாண்டு மாணவர் சேர்க்கை இல்லை என்ற முடிவை கல்லூரி எடுத்துவிட்டது. ஒரு பிரிவை எடுத்துவிட வேண்டுமெனில், மாற்றுப் பிரிவு சேர்க்கப்படவேண்டும். இந்த விதியை அறிந்தும் ஐ.டி. பிரிவு நீக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.
ஏற்கெனவே, இக்கல்லூரியில் மரைன் என்ஜினியரிங் கொண்டுவரும் முயற்சி கைவிடப்பட்டுவிட்டது. எந்தவொரு மாற்றுப் பிரிவும் கொண்டுவராமல் ஐ.டி. பிரிவை நீக்குவது முறையற்ற செயலாகும். காரைக்காலில் இந்த பிரிவுக்கு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். இது தேசிய அளவிலான பிரச்னை. மாணவர் குறைவாக இருப்பதாக தனியார் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கலாம். ஆனால், அரசு கல்லூரி மூடப்பட்டதாக குறிப்பு இல்லை.
ஒரு கல்லூரி செயல்பட 3 பிரிவுகள் இருக்கவேண்டிய நிலையில், இக்கல்லூரி 2 பிரிவுகளுடன் மட்டும் செயல்பட அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அனுமதிக்காது. எனவே, படிப்படியாக கல்லூரியை மூடிவிடும் அபாயம் உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு, ஐ.டி. பிரிவு இக்கல்லூரியில் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக சென்டாக் என்கிற முறையில் வேளாண்மை, கால்நடை, கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கை மாநிலம் தழுவிய ஒருங்கிணைந்த முறையில் நடைபெறுகிறது. இதில் பல குழப்பங்கள் நிலவுகிறது. மாணவர் சேர்க்கையும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. விரும்புகிற பிரிவு சிலருக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே, மருத்துவக் கல்விக்கு சென்டாக் செயல்பாடுகளை வைத்துக்கொண்டு, இதுபோன்ற கல்லூரிகளுக்கு பழைய முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும். அரசின் தவறான அணுகுமுறையால் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். அரசு இந்த விவகாரத்தில் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் ஏ.எம்.எச்.நாஜிம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT