காரைக்கால்

கஜா புயலில் விழுந்த மரங்கள் அகற்றம்: ஒப்பந்ததாரர்களுக்கான தொகையை வழங்க வலியுறுத்தல்

4th Jul 2019 08:51 AM

ADVERTISEMENT

கஜா புயலில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்திய ஒப்பந்ததாரர்களுக்கான ஒப்பந்தத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஒப்பந்த
தாரர்கள் நலச் சங்க  மாவட்ட அமைப்பாளர் டி.என்.சுரேஷ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கைக் கடிதத்தில் கூறியிருப்பது :
கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியில் வீசிய கஜா புயலில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மரங்களில் சுமார் 40 சதவீதம் வேரோடு சாய்ந்தன. பள்ளிகள், சாலையோரப் பகுதிகள், அரசு இடங்களில் விழுந்த மரங்களை பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி அகற்றினர். ஒப்பந்தப் பணியைத் தொழிலாளர்களை வைத்தும், அதனைக் கொண்டு செல்ல வாகனங்கள் பயன்படுத்தியும் பெரும் செலவு செய்யப்பட்டன. இவ்வாறான நிலைக்கு அதிகத் தொகையை செலவு செய்த ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக உரிய தொகை வந்துசேரவில்லை.  இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய தொகை தரப்படவில்லை என்றே கூறவேண்டும். ஒப்பந்ததாரர்கள் செய்த பணியில் எந்தக் குறைபாடும் இல்லாத வகையில் இருக்கும்போது, திட்டப்பணியை மேற்கொண்டோருக்கு சேரவேண்டிய தொகை மட்டும் நிலுவையில் இருப்பதால், பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.  மத்திய அரசு இயற்கைப் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ரூ.10 கோடி புதுச்சேரிக்கு தந்தும், ஒப்பந்தாரர்களுக்கு உரிய நிதி தரப்படவில்லை.  எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி, ஒவ்வோர் ஒப்பந்ததாரர்களுக்கும் கஜா புயல் பணியில் சேர வேண்டிய தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT