காரைக்கால்

இலவச அரிசி வழங்கலில் தட்டுப்பாடு: சமமாக வழங்கப்படவில்லை என புகார்

4th Jul 2019 08:49 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் சிவப்பு அட்டை வைத்திருக்கும் அனைவரும் பயனடையும் வகையில் அரிசி வழங்கப்படவில்லை எனவும், தட்டுப்பாட்டுடனேயே அரிசி வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறையால் வழங்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் அரசு வழங்க முன்வந்தது. மஞ்சள் நிற அட்டைதாரர்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்பதால், ஏழைகளுக்கு மட்டும் அரிசி வழங்க வேண்டும் என்பது துணை நிலை ஆளுநரின் கருத்து. இது அரசின் கொள்கை முடிவு என்ற விவாதத்தால், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக அரிசிக்கான பணம் வங்கிக் கணக்கில் செலுத்த அனுமதி தரப்பட்டது.
ஆனால் அரிசியும் முறையாக வழங்கப்படவில்லை, அரிசிக்கான பணமும் முறையாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்.
இதுவொருபுறமிருக்க, ரேஷன் கடையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு ஏறக்குறைய 25 மாதங்களுக்கான ஊதிய நிலுவையை அரசு வைத்திருக்கிறது. ஊழியர்களும் பலகட்ட போராட்டங்களை நடத்திவிட்டு, அரசின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் ஜனவரி மாதத்துக்கான அரிசி சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது பிப்ரவரி மாதத்துக்கான அரிசி காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அரிசியைக் குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கு அனுப்புகின்றனர். காரைக்காலுக்கு வந்திருக்கும் அரிசியிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் 30 ஆயிரம் சிவப்பு அட்டைதாரர்கள் உள்ளனர். ஓர்  அட்டைக்கு  20 கிலோ வீதம், மாதத்துக்கு 588 டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், தற்போது காரைக்காலுக்கு 199 டன் அரிசி மட்டுமே வந்துள்ளது.  இதனை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள பயனாளிகளுக்கு வழங்க முடியாமல், ஒருசில சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மட்டுமே அனுப்பி, விநியோகம் நடந்துவருகிறது.
பல மாதங்களுக்கான அரிசி நிலுவையை அரசு வைத்திருக்கிறது.
நிகழாண்டில்கூட பிப்ரவரி மாதத்துக்கான அரிசி அனைவரும் பயன்பெறும் வகையில் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் இதுபோன்ற தட்டுப்பாடுகள் ஏற்படாத  வகையில் அரிசி விநியோகம் நடைபெறுவதாகவும், காரைக்காலை மாற்றாந்தாய் மனப்பான்மையுன் அரசு நடத்துவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி, மாதந்தோறும் இலவச அரிசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. 
அதேவேளையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய பிரச்னையையும் களைந்து அவர்கள் நிம்மதியாக பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT