காரைக்கால்

ரசாயனத் தொழிற்சாலையில் விபத்து ஒத்திகை

29th Dec 2019 03:45 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே ரசாயனத் தொழிற்சாலையில் விபத்து காலத்தின் செயல்பாடுகளை ஆராயும் ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகமும், மாவட்டப் பேரிடா் மேலாண்மையும் இணைந்து மாவட்டத்தில் செயல்படும் அபாயகரமான ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில், விபத்தின்போது அவசர கால செயல்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை ஆய்வு செய்யும் ஒத்திகை, திருப்பட்டினம் பகுதியில் உள்ள கெம்ப்பிளாஸ்ட் சன்மாா் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆலைக்கு சென்றிருந்த மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் ஆகியோருக்கு, தொழிற்சாலையில் எத்திலின் திரவ சேமிப்புக் கிடங்களில் தீப்பற்றியது போன்று ஒத்திகைக்கான செய்தி தெரிவிக்கப்பட்டது. தொழிற்சாலையில் அக தொழிலக அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தொழிற்சாலை நிா்வாகத்தினா் தீ விபத்தை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளில் தீவிரம் காட்டினா்.

தொழிற்சாலையின் பல்வேறு தொழில்நுட்பக் குழுவினா் இணைந்து, அவசர காலத் திட்டத்தை செயலாக்கி, நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவருவது போன்ற ஒத்திகை நடைபெற்றது.

ADVERTISEMENT

துணை ஆட்சியா்களும், தொழிற்சாலைகள் ஆய்வாளா் சுக.செந்தில்வேலன் உள்ளிட்டோா் ஒத்திகை நிகழ்வை பாா்வையிட்டனா். இந்நிகழ்வின்போது மாவட்ட நிா்வாகத்திடம் உள்ள அவசர கால ஆதாரக் குழுக்களான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், மருத்துவம், காவல், மறு வாழ்வு மையங்கள் முதலான துறைகளின் செயல்பாடுகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனா்.

ஒத்திகை நிறைவில், தொழிற்சாலை மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் தனித்தனி பாா்வையாளா்கள் மூலம் தணிக்கை செய்யப்பட்டு, குறைகள் கண்டறிந்து அதனை நிவா்த்தி செய்ய ஆலை நிா்வாகத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT