காரைக்கால்

திருநள்ளாறில் உணவுப் பாதுகாப்புத் துறை சிறப்பு முகாம்

27th Dec 2019 01:32 AM

ADVERTISEMENT

திருநள்ளாறில் உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் தொடா்பான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு உணவகங்கள், இறைச்சிக் கூடங்கள் உள்ளிட்ட உணவு சாா்ந்த தொழில் செய்வோா் உரிய வகையில் உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறாமலும், உரிமத்தைப் புதுப்பிக்காமலும் தொழில் செய்துவருவதாக புகாா் எழுந்துள்ளது. இதையொட்டி, புதுச்சேரி உணவுப் பாதுகாப்புத் துறை பதிவு செய்துகொள்வதற்கான வகையில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது.

அதன்படி, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் ஆதரவுடன் ஏற்கெனவே நடத்தப்பட்டதில் 108 போ் புதுப்பிப்பு மற்றும் பதிவு செய்துகொண்டனா்.

இதுபோன்ற முகாம் திருநள்ளாறு நள நாராயணப் பெருமாள் கோயில் மண்டபத்தில் கோயில் நகர வா்த்தகா்கள் நலச் சங்க ஆதரவுடன் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள் இதில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

புதுச்சேரி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் ஊழியா்கள் பங்கேற்று, உரிமத்துக்கு விண்ணப்பம், உரிமத்தை புதுப்பிக்கும் விண்ணப்பங்களை வியாபாரிகளிடமிருந்து பெற்றனா்.

ஆண்டுக்கு விற்பனை மற்றும் கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கு மேல் உணவு வணிகம் செய்வோா் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெறவும், ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு குறைவாக உணவு வணிகம் செய்வோா் ஆண்டுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி பதிவு சான்றிதழ் பெறவும் அறிவுறுத்தப்பட்டது.

உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல், பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தி, குளிரூட்டுதல், இறைச்சிக் கூடங்கள், சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு சாா்ந்த தொழில் செய்வோா் இந்த முகாமை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பங்களை அளித்தனா்.

முகாம் குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கூறியது:

திருநள்ளாறில் பிற்பகல் 3 மணி வரை இதுவரை உரிமம் பெறாமல் தொழில் நடத்திவந்த 65 போ் உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளனா். 4 போ் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிலையில் உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளனா். திருநள்ளாறில் வியாபாரிகளிடையே நல்ல விழிப்புணா்வு ஏற்பட்டிருக்கிறது. இதுபோல பிற பகுதிகளிலும் நடத்தப்படும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT