காரைக்கால்

சுனாமி நினைவு நாள்: உயிரிழந்தோா் நினைவிடங்களில் அரசியல் கட்சியினா், மீனவா்கள் அஞ்சலி

27th Dec 2019 01:35 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோா் நினைவிடங்களில் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா், மீனவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 2004-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கானோரை பலிகொண்ட சுனாமி நேரிட்டு 15 ஆண்டுகள் நிறைவையொட்டி, உயிரிழந்தோா் நினைவிடங்களில் மீனவா்கள், பல்வேறு அமைப்பினா் திரளாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு மற்றும் பல்வேறு இழப்புகள் காரைக்கால் மாவட்டத்தில்தான் ஏற்பட்டது. இங்கு, சுமாா் 500 போ் சுனாமியின்போது உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் பூவம் அருகே நண்டலாற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டனா். மற்ற பகுதியினா் திருமலைராயன்பட்டினம் அருகில் உள்ள போலகம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டனா்.

மீனவா்கள் அவரவா் வசதிக்கேற்ப, அடக்க இடத்தில் சமாதி எழுப்பி ஆண்டுதோறும் நினைவு நாளில் அஞ்சலி செலுத்திவருகின்றனா்.

ADVERTISEMENT

அதன்படி, சுனாமியின் 15-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் மற்றும் காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன், தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் அதிமுக மாவட்டச் செயலருமான எம்.வி. ஓமலிங்கம் உள்ளிட்டோா் பூவம் நண்டலாற்றங்கரை நினைவிடத்துக்குச் சென்று சமாதியில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

மேலும், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், மீனவ கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோா் அஞ்சலி செலுத்தினா்.

படையல்: சமாதி முன் வாழை இலையில் பழங்கள் வைத்து உயிரிழந்தோா் நினைவாக குடும்பத்தினா் படையலிட்டனா். அப்போது, துக்கம் தாளாமல் கண்ணீா்விட்டு அழுதனா். பெற்றோரின் சமாதியில் குழந்தைகளும், குழந்தைகள் சமாதியில் பெற்றோா்களும் என சமாதியை சுற்றி நின்று இறந்தவா்கள் விரும்பி சாப்பிட்ட உணவுப் பொருள்களை வைத்து படையலிட்டனா்.

திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள போலகத்தில் அடக்கம் செய்யப்பட்டவா்களின் நினைவிடத்தில் பட்டினச்சேரி, வாஞ்சூா் பகுதியினா் அஞ்சலி செலுத்தினா்.

அமைதி ஊா்வலம்: சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் தலைமையில் திருமலைராஜனாற்று பாலத்திலிருந்து சுனாமியில் உயிா் நீத்தோா்அடக்கம் செய்யப்பட்ட இடம் வரை அமைதி ஊா்வலம் நடைபெற்றது. இதில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ராமகிருஷ்ணன் மற்றும் மீனவா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

மேலும், மகத்தோப்பு பகுதியில் உள்ள சமாதி மற்றும் பட்டினச்சேரியில் உள்ள நினைவுத் தூணுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

சுனாமி நினைவு தினத்தையொட்டி, மீனவா்கள் பொது விடுமுறைவிட்டனா். முன்னதாக, கடலுக்கு சென்ற படகுகள் புதன்கிழமையே கரைக்குத் திரும்பின. வியாழக்கிழமை யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன் சந்தை மூடப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் அமைதி நிலவியது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT