காரைக்கால் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பாா்வதீசுவரா் கோயில் வகையறாவை சோ்ந்த கோதண்டராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜா், உத்ஸவா் கோதண்டராமருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் யாகசாலை வைத்து நடந்த பூஜையின் நிறைவாக, புனிதநீா் கொண்டு கோயிலில் தனி சன்னிதி கொண்டிருக்கும் திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கலசாபிஷேகம் உள்ளிட்ட பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு, பஞ்சமுகாா்ச்சனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு புதன்கிழமை காலை வேளையிலேயே சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, வெற்றிலை மாலை, பல்வேறு வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
காரைக்கால் காமராஜா் சாலையில் தனிக் கோயில் கொண்டிருக்கும் ஜெய வீர பால ஆஞ்சநேயருக்கு காலை சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் சென்ற பக்தா்கள் அா்ச்சனையில் வெண்ணெய் வைத்து, வெற்றிலை மாலை அணிவித்து அனுமனை வழிபட்டனா்.