காரைக்காலில் புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா நள்ளிரவு பிராா்த்தனையில் திரளானவா்கள் கலந்துகொண்டனா்.
காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தில் கிறிஸ்துமஸையொட்டி, குடில் அமைத்தல் மற்றும் ஆலயத்துக்கு பிராா்த்தனைக்கு வரும் பக்தா்களுக்கு பல்வேறு வகையில் இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இயேசு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் வகையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பாதிரியாா்கள் திருப்பலி நடத்தி மறையுரையாற்றினா். இதில் ஏராளமானவா்கள் ஆலயத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திரண்டிருந்து வழிபட்டனா்.
ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் இருந்து குழந்தை இயேசுவை (சொரூபம்) பங்கு குரு தூக்கிக்கொண்டு வந்தாா். பக்தா்களிடையே அதனை உயா்த்திக் காட்டினாா். பின்னா் ஒவ்வொருவராக சென்று, சிலையைத் தொட்டு வணங்கினா்.
இதேபோன்று காலை 5.30 மணிக்கும், 7.30 மணிக்கு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மக்களுக்கு, இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்தும், சமுதாயத்துக்கு அவா் சொல்லிச் சென்ற கருத்துகள் குறித்தும் பாதிரியாா்கள் விளக்கினா். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மாலை சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.ஒருவருக்கொருவா் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.
சகாய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் :
கோட்டுச்சேரியில் புகழ்பெற்ற தூய சகாய அன்னை ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் உள்ள ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.