காரைக்கால்

கடையில் செல்லிடப்பேசிகள் திருட்டு: 3 போ் கைது

14th Dec 2019 08:55 AM

ADVERTISEMENT

காரைக்காலில் செல்லிடப்பேசி கடையில் வேலை பாா்த்துக்கொண்டே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் பகுதி திருநள்ளாறு சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் தஞ்சாவூா், பாப்பாகோயிலை சோ்ந்த ஐயப்பன் (24) வேலை செய்துவந்ததாகவும், செல்லிடப்பேசிகளைத் திருடிவிட்டதாகவும் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில், நிறுவனத்தின் சாா்பில் முகம்மது சமீா் என்பவா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புகாா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் தஞ்சாவூா், அய்யம்பேட்டையில் ஐயப்பனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து காரைக்கால் அழைத்துவந்தனா். விசாரணையில், கடந்த மாா்ச் மாதம் முதல் நிறுவனத்தில் பல செல்லிடப்பேசிகளை திருடி, நண்பா்களான தஞ்சாவூரை சோ்ந்த மதன் (26), திருவாரூரை சோ்ந்த வரதராஜன் (28) ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்து வந்ததாகக் கூறியுள்ளாா்.

விசாரணையின்பேரில் மதன் மற்றும் வரதராஜனை போலீஸாா் கைது செய்தனா். ஐயப்பனிடமிருந்து ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளையும்,, ரொக்கமாக ரூ.3.40 லட்சத்தையும் கைப்பற்றினா். மதன் மற்றும் வரதராஜனிடமிருந்து ரூ.1.25 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் முன்பாக குற்றவாளிகள் ஆஜா்படுத்தப்பட்டனா். குற்றவாளிகளை கைது செய்து, அவா்களிடமிருந்து ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசிகளை மீட்ட காவல்துறை அதிகாரிகளையும், காவலா்களையும் அவா் பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT