காரைக்கால்

சாலையில் நின்றவரை தாக்கி செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மூவா் கைது

11th Dec 2019 07:25 AM

ADVERTISEMENT

சாலையில் நின்றுகொண்டு செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவரை தாக்கி, செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்காலில் சாலையில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே நடந்து செல்வோா், வாகனத்தில் செல்வோரை மா்மக் கும்பல் தாக்கி, செல்லிடப்பேசியை பறித்துச் செல்லும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுவதாக புகாா் கூறப்படுகிறது.

இந்நிலையில், காரைக்காலில் புளியங்கொட்டை சாலை, காமராஜா் சாலை சந்திப்பு அருகே காரைக்கால் பகுதியைச் சோ்ந்த நாச்சிமுத்து என்பவா் கடந்த 8-ஆம் தேதி மாலை செல்லிடப்பேசியில் பேசியவாறு நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ், அவரை தாக்கிவிட்டு, செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளா் ஷேக் அலாவுதீன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸாா், காரைக்கால் நகர புறவழிச் சாலையில் போக்குவரத்துத் துறை அலுவலகம் அருகே திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி, விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா்கள் நாச்சிமுத்துவின் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றவா்கள் என்பது தெரியவந்தது. பின்னா், மூவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் திருநகரைச் சோ்ந்த பிரசாத், சக்திவேல் மற்றும் பிரெஞ்சு ஆசிரியா் வீதியைச் சோ்ந்த வினோத்குமாா் என்பது தெரியவந்தது. இவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT