வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்கள் காரைக்காலில் பழைமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறுவதையொட்டி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணி நோக்கி பயணிக்கின்றனர். தமிழகம், கர்நாடகம் போன்ற அண்டை மாநில பக்தர்கள் 10 முதல் 15 நாள்கள் வரை பாத யாத்திரை மேற்கொள்கின்றனர்.
பெங்களூரு மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் காரைக்கால் வழியே வேளாங்கண்ணிக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இதனால் காரைக்கால் கடந்த 3 நாள்களாக பெருமளவு போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த தூய தேற்றவு அன்னை ஆலயம் உள்ளது. இதன் கோபுர கட்டுமானம் கலையம்சம் கொண்டது என்பதால், இதைக் காணும் நோக்கில் பாத யாத்திரைக் குழுவினர் வருகின்றனர். பெங்களூர், சென்னை பகுதிகளில் இருந்து யாத்திரைக் குழுவினர் மாதா சொரூபத்தை தங்களது மோட்டார் வாகனத்தில் அலங்கார வடிவில் அமைத்துக்கொண்டு, அன்னையின் புகழ்பாடிக் கொண்டு காரைக்காலுக்கு புதன்கிழமை வந்துசேர்ந்தனர்.
பெங்களூருவிலிருந்து வந்த பக்தர்கள் கூறும்போது, கடந்த 16-ஆம் தேதி புறப்பட்டு சேலம் வழியாக காரைக்காலுக்கு புதன்கிழமை வந்துள்ளோம். எல்லா பகுதிகளிலும் பக்தர்கள் உணவு, குடிநீர் போன்றவற்றை தாராளமாக வழங்குகின்றனர். காரைக்காலில் மக்கள் அளித்த உபசரிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. வியாழக்கிழமை காலை வேளாங்கண்ணி சென்றுவிடுவோம் என்றனர்.
சென்னையிலிருந்து வந்த குழுவினர் கூறும்போது, கடந்த 20-ஆம் தேதி புறப்பட்டு காரைக்காலுக்கு வந்துள்ளோம். காரைக்கால் பகுதியில் தேற்றரவு அன்னை ஆலயத்தில் தரிசனம் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் காரைக்காலில் இத்தலத்துக்கு வந்துவிட்டே வேளாங்கண்ணி புறப்படுவோம். காரைக்காலில் பல்வேறு மதத்தினரும் தரும் அன்பான உபசரிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது என்றனர். காரைக்காலில் சாலையோரங்களில் பல்வேறு அமைப்பினர் உணவு, குடிநீர், ரொட்டி, குளிர்பானங்கள் போன்றவற்றை அளித்தனர்.