அரசலாறு முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், மீன் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நீடித்தது. மீன் வரத்தின்மையால் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
காரைக்கால் அரசலாறு முகத்துவாரம் தூர்வாரப்பட்டு ஏறக்குறைய 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. முகத்துவாரம் தூர்ந்து போனதால் படகுகள் எளிதில் கடலுக்குச் சென்று திரும்ப முடியவில்லை. வெளியூரிலிருந்து பெரு நிறுவனத்தினர் மீன் வாங்கும்போது, அவர்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், மீன்கள் வாங்குவதைக் குறைத்துவிட்டனர்.
மீன் விற்பனையில் மந்த நிலை ஏற்படுவதாகக் கூறி, இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசும், மத்திய அரசும் தலையிட வேண்டும் என வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். போராட்டத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவை, மீனவ கிராமப் பஞ்சாயத்தார் சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். முகத்துவாரம் ஒரு வார காலத்தில் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்த போதிலும், போராட்டம் 3-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்தது. மீன்பிடித் துறைமுகத்தில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பெரும்பாலான படகுகள் கரைக்கு வந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கிராமங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் ஃபைபர் படகுகள் மட்டும் வழக்கம்போல பணிகளில் ஈடுபட்டுள்ளதால்,
சந்தைக்கு மீன்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கூறும்போது, முகத்துவாரத்தைத் தூர் வேண்டும், நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யவேண்டுமென்ற இரு கோரிக்கைகளும் முக்கியமானதாகும். மாநில அரசு ஒரு வார காலத்தில் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக கூறியிருப்பதை எதிர்நோக்கியுள்ளோம். வரி குறைப்பில் மத்திய அரசு உரிய முடிவெடுத்தால் மட்டுமே நிறுவனங்கள் மீன்களை வாங்கும். இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கேற்ப போராட்டத்தைத் தீவிரப்படுத்தவுள்ளோம் என்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வரத்தின்மையால், வெளியூரிலிருந்து மீன் ஏற்ற வந்த லாரிகள் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்களது வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.