7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பிரின்ஸ் நிர்மல் தலைமை வகித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் 33 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும், மற்ற அரசுத் துறையினருக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்குவது போல் அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் ஊதியம் தரவேண்டும், பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் பேசினர்.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், 7-ஆவது ஊதிக்குழு பரிந்துரை அமலாக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, அரசாணையாக வெளியிட வேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 5- ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து புதுச்சேரி சட்டப் பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆர். காளிதாசன், காரைக்கால் மாவட்ட அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் அ. வின்சென்ட், காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கௌரவத் தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங் உள்ளிட்டோர் சங்கத்தினர் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.