நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே புளியங்கொட்டை சாலையில், காரைக்கால் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் அரசியல் குழு மாநிலத் துணைச் செயலர் பொன். செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கும், காவல் துறையினர் அதை தடுக்க தவறியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்வதோடு, சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அமைப்பை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமுமுக மாநிலச் செயலர் அப்துல் ரஹீம், மாவட்டத் தலைவர் ராஜா முகமது உள்ளிட்ட தமுமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொகுதி செயலர்கள் விடுதலைக் கனல், தமிழரசி, செல்வம், கலைவாணன், வல்லவன் உள்ளிட்ட சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை
போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.