காரைக்கால்

காவிரி நீர்: காரைக்கால் எல்லையை வந்தடைய 10 நாள்கள் ஆகும்: பொதுப்பணித் துறை அதிகாரி தகவல்

27th Aug 2019 07:46 AM

ADVERTISEMENT

காரைக்கால் எல்லைக்குள் காவிரி நீர் வந்து சேர மேலும் 10 நாள்களாகும் என பொதுப்பணித் துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வந்து சேர்ந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி அணை திறப்பு செய்யப்பட்டது. பொதுவாக கல்லணை திறப்பு செய்தால் 10 நாள்களுக்குள் காரைக்கால் கடைமடைக்குத் தண்ணீர் வந்து சேர்ந்துவிடும். நாகை மாவட்ட எல்லையில் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த காவிரி நீர், காரைக்கால் எல்லைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. காவிரி நீர் வரத்து உறுதியாகாத நிலையில், வேளாண் பணியை தொடங்குவது சாத்தியமில்லை என காரைக்கல் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். பரவலாக சம்பா பருவத்துக்கான வேளாண் பணியை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் செய்யாமல் உள்ளனர். 
காவிரி நீர் காரைக்காலுக்கு வருவதற்கு செய்திருக்கும் ஏற்பாடுகள் குறித்து காரைக்கால் பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் (நீர்ப்பாசனம்) எஸ். பழனி திங்கள்கிழமை கூறியது : கல்லணை திறந்து 10 நாள்களுக்குள் காரைக்காலுக்கு தண்ணீர் வருவது வழக்கம். ஆனால், தமிழகப் பகுதி ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, காரைக்கால் எல்லையிலிருந்து இப்பணியை அவர்கள் செய்து வருகிறார்கள். இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டுவிடும், பின்னர் காரைக்கால் பகுதி நூலாற்றில் தண்ணீர் விடுவித்துவிடுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது மேட்டூர் அணையில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தண்ணீர் திறப்பை அதிகரித்தால் மட்டுமே காரைக்கால் கடைமடைக்கு தண்ணீர் வரத்து எளிதாக இருக்குமென கூறியுள்ளோம். தற்போது திறந்துவிடப்படும் தண்ணீரானது கல்லணையிலிருந்து காவிரியில் 3 ஆயிரம் கன அடி வீதம் வருவதால், காரைக்காலுக்கு போதிய அளவில் வருமென கூறிவிடமுடியாது. இதனால்தான் நீர் திறப்பு வீதத்தை அதிகரிக்கவும், காவிரியில் தண்ணீர் திறக்கவும் கவனம் செலுத்துமாறு தமிழக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, காரைக்காலுக்குள் தண்ணீர் வந்துசேர மேலும் 10 நாள்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலை பொருத்தவரை மாவட்ட நிர்வாகத்தின் நம் நீர் திட்டம், பொதுப்பணித் துறையின் மூலமாகவும் நீர்நிலைகள் ஏறக்குறைய தூர்வாரப்பட்டுள்ளன. 15 சதவீத அளவிலேயே பணிகள் நிலுவை இருக்கின்றன. இந்த இடங்களிலும் தூர்வாரும் பணியை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆறு, வாய்க்கால்களின் தடுப்பு அணைகள் (ஷெல்டர்) அரிப்பு ஏற்பட்டிருந்த பகுதிகளில் புதிதாக தகடு பொருத்தி வெல்டு வைக்கும் பணிகள் ஏறக்குறைய முடிந்துள்ளன. சில வாய்க்கால்களில் மட்டும் எஞ்சியிருக்கிறது. இதையும் அடுத்த சில நாள்களில் முடித்துவிடுவோம்.
காரைக்காலுக்குள் காவிர் நீர் நுழையத் தொடங்கினால், அது தங்குத்தடையின்றி பிற இடங்களுக்கும் பாயும் வகையில் நீர் நிலைகளை சரிசெய்யும் பணியில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். அடுத்த 2 நாள்களில் விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டறிந்து, அவர்களை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று, பிரச்னைகளை அறிந்து அதை சீர் செய்யவும் சிறப்பு  நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT