பள்ளி, கல்லூரிகளில் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தவேண்டும் என அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தலைமையில் புதுச்சேரியில் முன்னாள் தலைமைச் செயலர் விஜயன், கல்வித்துறை இயக்குநர் ருத்ரகௌடு மற்றும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாணவர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், எஸ்.எம்.சி. என்கிற அமைப்பு மூலம் பள்ளிகளில் 14 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளில் பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தலைமையில் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேற்கண்ட திட்டம் மற்றும் பயன்கள் குறித்து ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா ஆசிரியர்களுக்கு விளக்கிக் கூறினார்.
பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுத் துறையில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்த பின் அமைச்சர் கூறியது: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்றவராக திகழவேண்டுமென விரும்புகிறோம். பல்வேறு விளையாட்டுகள் இருந்தாலும், கால்பந்து என்பது பலரை ஆளுமை மிக்கவர்களாக உயர்த்த உதவும் விளையாட்டாக உள்ளது. விவேகானந்தர் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமிக்கவர். உலகமே பாராட்டும் நிலைக்கு உயர்ந்தவர். இதுபோல், பல்வேறு ஆளுமை மிக்கத் தலைவர்கள் குறித்து அறியும்போது, அவர்கள் ஆரம்பக்காலத்தில் கால்பந்து விளையாட்டு வீரராக, ஆர்வலராக இருந்ததை தெரிந்துகொள்ளமுடியும். மன அழுத்தம் நீங்குதல், மனதை ஒருநிலைப்படுத்துதல், பதற்றமில்லா வாழ்க்கைக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த விளையாட்டு உதவுகிறது. இதனை கருத்தில்கொண்டே புதுவையில் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாடுவதற்கென விரிவான மைதானங்கள் சில இடங்களில் மட்டுமே உள்ளது. கோட்டுச்சேரி பகுதியில் இதற்கான மைதானத்தை அமைக்க கவனம் செலுத்தப்படும். எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலம் விளையாட்டுத் துறைக்கு தரப்படும் நிதியிலிருந்து விளையாட்டு உபகரணங்களை வாங்கி, மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்த ஏற்பாடு செய்யவேண்டும். கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தி, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யலாம் என்றார் அமைச்சர்.
கூட்டத்தில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் எஸ். பழனி, முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.