காரைக்கால்

ஓ.என்.ஜி.சி.யில்  புதிய திட்டங்கள் கிடையாது: காவிரி அசெட் மேலாளர் வி.வி.மிஸ்ரா

16th Aug 2019 07:24 AM

ADVERTISEMENT

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியைத் தவிர வேறுவிதமான புதிய திட்டங்கள்  ஓ.என்.ஜி.சி.யிடம் இல்லை  என அதன் காவிரி அசெட் மேலாளர் தெரிவித்தார். 
காரைக்கால் மாவட்டம், நிரவியில் உள்ள ஓ.என்.ஜி.சி. காவிரி அசெட்  நிர்வாக அலுவலகத்தில் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றிவைத்த அதன் செயல்  இயக்குநரும், அசெட் மேலாளருமான வி.வி.மிஸ்ரா பேசியது:  
 காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 1,050 மெட்ரிக் டன் எண்ணெய், 33 லட்சம் கன மீட்டர் இயற்கை எரிவாயு என்கிற உற்பத்தி இலக்கை எட்டியுள்ளது.
உலகத் தர வரிசையில் ஓ.என்.ஜி.சி. 11-ஆவது பெரிய ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனத்துக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரியாவு தேவையில்  73 சதவீதத்தை நிறைவேற்றிவருகிறது. ஓ.என்.ஜி.சி. சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் (சிஎஸ்ஆர்) மூலமாக கடந்த 10 ஆண்டுகளில் ரூ.30 கோடிக்கு மேல் மக்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழக அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ராயல்டியாக தரப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி.க்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள், தங்களது தேவைகளையும், கருத்துகளையும் எங்களிடம் தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
ஓ.என்.ஜி.சி.யில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தவிர, வேறுவித திட்டங்கள் எதுவும் இல்லை. வழக்கமான தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் 700 கிணறுகளைத் தவிர, வேறு புதிய திட்டங்கள் குறிப்பாக ஷேல் கேஸ், மீத்தேன் திட்டத்துக்கான கிணறுகள் எதுவும் அமைக்கப்படவில்லை என்றார் அவர். ஓ.என்.ஜி.சி. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓ.என்.ஜி.சி. பாதுகாவலர்கள் கொடி அணிவகுப்பு மரியாதையை அசெட் மேலாளர் ஏற்றார். நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT