காரைக்கால்

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவர் வஜ்ராங்கி சேவை

11th Aug 2019 01:32 AM

ADVERTISEMENT


காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
காரைக்கால் பெருமாள் கோயிலில் மூலவர் ரங்கநாதர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் திருமேனிக்கு வஜ்ராங்கியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உபயதாரர்கள் செய்தளித்தனர்.
ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு, பரமபதவாசல் திறப்பு ஆகிய 2 நாள்களிலும், ஆடி மாதத்தில் ஒரு தினத்திலும் மூலவருக்கு வஜ்ராங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது. இவ்வகையில் ஆடி மாதத்தின் சனிக்கிழமையில் மூலவருக்கு வஜ்ராங்கி அணிவித்து, காலை 8 மணி முதல் வழிபாடுகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சனிக்கிழமை என்பதால் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் மிகுதியாக இருப்பதோடு, வஜ்ராங்கி சேவை என்ற தகவலறிந்து ஏராளமானோர் காலை முதல் இரவு 9 மணி வரை (மதியம் நடை மூடப்பட்ட நேரம் நீங்கலாக)  மூலவரை தரிசனம் செய்தனர். உத்ஸவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத நித்யகல்யாணப் பெருமாள், தாயார் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார். பக்தர்கள் உத்ஸவருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். காரைக்கால் பகுதியில் முக்கிய பிரமுகர்கள் பலரும் வஜ்ராங்கி சேவையில் பெருமாளை வழிபாடு செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT