காரைக்கால்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை மும்முரம்

11th Aug 2019 01:32 AM

ADVERTISEMENT


காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும், காவல்துறையினர் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
காரைக்காலில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள், போலியான சீட்டுகள், 3 எண் லாட்டரி என பல்வேறு வகைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒருபுறம் சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் மது வகைகள், மறுபுறம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்  கண்கவரும் வண்ண பாக்கெட்டுகளில் விற்பனை  மற்றும் கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்  சர்வசாதாரணாக கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனை கட்டுப்படுத்தக்கூடிய உணவு பாதுகாப்புத்துறை காரைக்காலில் இல்லை. காவல்துறையினரும் சட்டப்படியான நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. பல நேரங்களில் சட்டத்துக்குப் புறம்பான தொழில் செய்வோருக்கு ஆதரவான போக்கையே காவல்துறையினர் கையாள்வதாக சமூக  ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஏ.எம்.இஸ்மாயில் சனிக்கிழமை கூறியது :  
காரைக்காலில் 3 எண் லாட்டரி என்கிற சூதாட்டம் ஆங்காங்கே சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. நடுத்தர மக்களும், தினக்கூலி தொழிலாளர்களும், மாணவர்களும் என  பேராசையின் காரணத்தால் தங்கள் வருமானத்தையும், வாழ்க்கையையும் தொலைத்துகொண்டு வருகிறார்கள். 
இந்த சூதாட்டத்தில் அருணாசல நியூ குயில் என்ற  லாட்டரி சீட்டு நகல்  வெகுவாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.  மாணவர்களும், குடும்பத்தை காக்கக்கூடிய தலைவர்களும் வாழ்க்கையை சீரழித்துக்கொள்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. 
காரைக்கால் காவல்துறையினர் மனசாட்சிக்கு பயந்து நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் இம்மாதிரி லாட்டரிகளை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளை கைது செய்து கணக்கு காட்டாமல், மொத்த வியாபாரிகள் யார் என்பதை அறிந்திருக்கும்போது, அவர்களை கைது செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, போலி லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT