கோடையில் மின் தேவையை சமாளிக்கும் தானியங்கி துணை மின் நிலையம்!

காரைக்காலில் சுமார் ரூ.50 கோடி செலவில் அண்மையில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள

காரைக்காலில் சுமார் ரூ.50 கோடி செலவில் அண்மையில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையம், சுமார் 15 ஆண்டுகளாக கோடையில் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை நீடித்துவந்தது, இப்போது முதல்  மாறியிருப்பதாக  கூறப்படுகிறது. 
காரைக்கால் மாவட்டத்தின் வீடு, தொழிற்சாலைகள், வணிக நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினருக்கு 70 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் 30 மெகா வாட் காரைக்காலில் எரிவாயு மூலம் உற்பத்தி செய்யும் புதுச்சேரி மின்திறல் குழுமத்திலிருந்து பெறப்படுகிறது. 
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோருக்கு, மின்சாரத்தில் பகிர்ந்து அளிக்கும் வகையில் பிள்ளைத்தெருவாசல், சுரக்குடியில் தலா 110 கே.வி. திறனில்  துணை மின் நிலையங்கள் இருந்துவருகின்றன. நெய்வேலியிலிருந்து காரைக்காலுக்குத் தேவையான மின்சாரம் திருவாரூர் துணை மின் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து காரைக்காலுக்கு வந்துகொண்டிருந்தது. 
காரைக்காலுக்கான மின்சாரத்தை நேரடியாக  நெய்வேலியிலிருந்து  பெறும் வகையில், பிள்ளைத்தெருவாசல் பகுதியில் ரூ.48.17 கோடியில் 230/110 கி.வோல்ட் தானியங்கி துணை மின் நிலையம்  கடந்த 2 ஆண்டுகளாக அமைக்கப்பட்டுவந்தது. நெய்வேலியிலிருந்து பாகூர் வரை வரும் மின்சாரத்தை, அங்கிருந்து காரைக்காலுக்கு நேரடியாக  கொண்டுவர 400 உயர்மின் கோபுரங்கள் 135 கி.மீ. தூரத்தில் நிறுவப்பட்டன.  இந்த நிலையம் கடந்த பிப்ரவரி மாதம் நாட்டுக்கு புதுச்சேரி முதல்வரால் அர்ப்பணிக்கப்பட்டது.
நிகழாண்டு கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இதை சோதனை காலமாகவே பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தை வைத்து பார்க்கப்படுகிறது.  தானியங்கி துணை மின் நிலையம் அமைப்பின் மூலம் பாகூர் முதல் காரைக்கால் வரை புதிதாக கோபுரங்கள், கம்பிகள் மற்றும் காரைக்கால் நிலையத்தில் அனைத்து சாதனங்களும் புதிதாகவே அமைந்துள்ளன. எனவே மின் சேதத்துக்கு வாய்ப்பில்லை.
இதுகுறித்து மின்துறையினர் தரப்பில் கூறும்போது, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மின் அழுத்த குறைபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்தன. இவை ஒட்டுமொத்தமாக இந்த புதிய தானியங்கி துணை மின் நிலையத்தால் சீராகிவிட்டதென்றே கூறமுடியும். இந்த நிலையம் 100 மெகாவாட் மின்சாரம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மின் நுகர்வோருக்கு பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. 
திருச்சி முதல் காரைக்கால் வரை ரயில்வே மின் மயமாக்கப்படும் பணி நடைபெறுகிறது. ரயில்வேக்கு தேவையான மின்சாரம், காரைக்கால் போலகத்தில் உருவாகும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்சாரத்தை இதன் மூலம் தரமுடியும் என்கின்றனர். எனினும் காரைக்கால் மின் தேவையை முழுமையாக, மின்சாரம் சேதமின்றி கிடைக்கும் வகையில் இந்த துணை மின் நிலையம் அமைந்தது காரைக்கால் வளர்ச்சிக்கான மைல் கல் என்றே ஆட்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் பழுது : கஜா புயலுக்குப் பின்னரும், தேர்தல் வருவதைக் கருத்தில்கொண்டும் காரைக்காலில் பரவலாக மின்சாரப் பழுதுகள் நீக்கப்பட்டு, மின் கம்பங்களில் விளக்குகள் எரியவிடப்பட்டன. பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையானது அகலப்படுத்தப்பட்டு புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டன. இந்த கம்பங்களில் குழல் விளக்குகளுக்குப் பதிலாக எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டன. பல இடங்களில் உள்ள கம்பங்களில் இந்த விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதுகுறித்து 
மின்துறையினரிடம் விசாரிக்கும்போது, இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை. இது ஒப்பந்த நிறுவனத்தினர் செய்யக்கூடியது என்கின்றனர். புதிதாக நிறுவிய கம்பங்களானது மண்ணில் சாதாரணமாக புதைக்கப்பட்டது. இவை கம்பிகளின் இழுவை வேகத்தால், பல கம்பங்கள் சாய்ந்துள்ளன. திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலையோர கம்பங்களின், கீழ் பகுதியில் கான்கிரீட் போடப்பட்டு நிறுவப்படுகிறது. ஆனால் வாஞ்சூர் முதல் பூவம் வரையிலான பகுதியில் இந்த முறை கடைப்பிடிக்காததால் கம்பங்கள் சாய்ந்துவருகின்றன.
மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, அனைத்து கம்பங்களின் கீழும் கான்கிரீட் போடப்படவும், மின் விளக்குகளை தேசிய நெடுஞ்சாலையில் எரியவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிறிய பிரச்னைகளை சீர்செய்யாவிடில், ரூ.50 கோடியில் துணை மின் நிலையம் அமைத்தும், அதன் பயன் முழுமையடையாமலேயே இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் 
தெவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com