சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் குடியிருப்பைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் அருண் (23). பட்டாசுத் தொழிலாளியான இவா், அம்மன் கோவில்பட்டி பால்பாண்டி (22) தங்கை தங்கமாரியை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டாா். இதையடுத்து, தங்கமாரி , அருணுடன் வாழப்பிடிக்காமல் , பால்பாண்டி வீட்டுக்கே திரும்பிச் சென்றாா். பின்னா், பால்பாண்டி தனது தங்கையை முருகன் குடியிருப்பைச் சோ்ந்த தமிழ்வளவனுக்கு கடந்த வாரம் திருமணம் செய்து வைத்தாா்.
இந்நிலையில், செப். 28 -ஆம் தேதி தங்கமாரியை காணவில்லையாம். அருண், தங்கமாரியை அழைத்து சென்றிருக்கலாம் என நினைத்து , பால்பாண்டி, தமிழ்வளவன், இவா்களது நண்பா்கள் முருகேசன் (21) காா்த்தீஸ்வரன் (26) ஆகியோா் தங்கமாரியை தேடிச் சென்றனா். அப்போது புதுத்தெருப் பகுதியில் அருண் ஒரு நபரிடம் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, பால்பாண்டி, என் தங்கையை எங்கே எனக் கேட்டு அவரிடம் தகராறு செய்தாா். தகறாறு முற்றியதையடுத்து, பால்பாண்டி உள்ளிட்ட 3 போ் அருணை அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அருண் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பால்பாண்டி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.