விருதுநகர்

சிவகாசி மாநகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

22nd Sep 2023 10:28 PM

ADVERTISEMENT

சிவகாசி மாநகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு செயற்பொறியாளா் நியமிக்கப்பட்டாா். இதே போல, மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி நகராட்சியும், திருத்தங்கல் நகராட்சியும் இணைக்கப்பட்டு கடந்த 2021- ஆம் ஆண்டு சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

அப்போது சிவகாசி நகராட்சி ஆணையராக பணியாற்றிய கிருஷ்ணமூா்த்தி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதில், மாநகராட்சி செயற்பொறியாளா் பணி, விருதுநகா் நகராட்சி பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

ஆனால் பிற பணியிடங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படாமல், அந்த 2 நகராட்சிகளில் பணியாற்றிய அலுவலா்களே மாநகராட்சிக்கு உரிய பொறுப்புக்களை கூடுதலாக கவனித்து வந்தனா். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம், சிவகாசி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களுக்கு தலா ஒரு உதவி ஆணையா், பொறியியல், சுகாதாரம், பொதுக் கணக்கு, நகரமைப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளுக்கும் உதவி ஆணையா் நிலையில் தலா ஒரு செயற்பொறியாளா் பணியிடம் ஒதுக்கப்பட்டது.

ADVERTISEMENT

முதுநிலை மருத்துவா் நிலையில் நகர சுகாதார அலுவலரும், 8 சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் 4 மண்டலங்களுக்கும் துறைகளுக்கு ஒருவா் என இரண்டாம் நிலை நகராட்சி ஆணையா் நிலையில் 8 கண்காணிப்பாளா் பதவிகளும் உருவாக்கப்பட்டன. மேலும் உதவி செயற்பொறியாளா்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளா், நகரமைப்பு ஆய்வாளா் மற்றும் அலுவலகப் பணியிடங்களும் அதிகரிக்கப்பட்டன.

ஆனால் அதற்குரிய அதிகாரிகள் நியமிக்கப்படாததால் மாநகராட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டு பொதுக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்த நிலையில், சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னா் தற்போது திருப்பூா் மாநகராட்சியில் பணியாற்றிய செயற்பொறியாளரான ராமசாமி, சிவகாசி மாநகராட்சி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதே போல, சிவகாசி மாநகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களில் உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT